நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் சரவணன் சந்திரன் (Saravanan Chandran) அவர்களின் முகநூல் பதிவு:
ஜெயலலிதா குடும்பத்தினருக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் இடையில் ஒரு சுவாரசியாமான போட்டியொன்று நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாகவே ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் ஒரு சிலர் அப்படி இப்படி இருப்பார்கள். காசிக்கு சில பேர் ஓடிப் போவார்கள். பத்து வருடம் கழித்து ஜடாமுடியுடன் வந்து நிற்கிறவரை சுட்டிக் காட்டி, “யார் தெரியுதா? உஞ்சித்தப்பன்” என்பார்கள். மரை கழன்றவர்கள் என்கிற வார்த்தையை இந்தயிடத்தில் பயன்படுத்துவது பொலிட்டிகலி கரெக்டா என இன்னமும் எனக்கு விளங்கவில்லை. தீபா ஆடிக் கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் இப்படியெல்லாம் மரை கழன்று எனக்கும் யோசிக்கத் தோன்றுகிறது.
கட்சிப் பொருளாளர்/தலைவர்/செயலாளர் என எல்லா பதவிகளையும் ஒருசேரக் கொண்ட தலைவி இவர் மட்டும்தான் இருக்க முடியும். இன்னும் என்னவெல்லாம் கூத்தடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அவரே அறிவித்து விட்டார் ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் என்று. இது இருக்கட்டும். இதற்கு முன்னர் சசிகலா குடும்பத்தில் இருந்து ஒருத்தர் கிளம்பி வந்தது நியாபகம் இருக்கிறதா? இப்போதுகூட சசிகலா/இளவரசியுடன் சிறையில் இருக்கிறாரே? அவர் பெயர் சுதாகரன். வளர்ப்பு மகன் என்று கூடச் சொல்வார்கள்.
மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஒன்றிற்கும் இப்போது ஜெயலலிதா செத்துப் போனதற்கும் சசிகலா சிறைக்குப் போயிருப்பதற்கும் ஒருவகையில் அவரும்கூட ஒரு காரணம். அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அந்த ஆடம்பரத் திருமணம்தான் அனைவரது கண்ணையும் உறுத்தியது. அதற்கப்புறம்தான் கருமையின் நிழல் அந்தக் கூடாரத்தில் விழ ஆரம்பித்தது. இவ்வளவு பெரிய அரசியல் மாற்றத்திற்கு காரணமான ஆள் எப்படி இருந்திருக்க வேண்டும்?
ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பில்லாதவராக இருந்தார். பணம் அவரிடம் குவிந்து கிடந்தது அப்போது. திமுக ஆட்சிக் காலகட்டத்தில் வழக்குகள் காரணமாக ஜெ-சசி இருவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். வங்கிக் கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டிருந்தன. ஒருகட்டத்தில் முக்கியமான செலவுகளுக்குக்கூட பணம் இல்லை. சுதாகரனை அழைத்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு வா எனக் கேட்ட போது, “உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா” என அசிங்கமான வார்த்தை ஒன்றைப் போட்டுத் திட்டியிருக்கிறார். பிடித்தது சனியன் அவருக்கு. அடுத்த முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞர் கைதையே இரண்டாவதாகத்தான் செய்தார். முதல் கைது சுதாகரன்தான். எல்லோருக்கும் அதற்கடுத்து நடந்த காட்சிகள் தெரியும்.
அந்தக் காலகட்டத்தில் சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆர் மன்றம் என ஒரு அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார். சின்ன எம்.ஜி.ஆர் என்றுதான் அவரை அப்போது அழைக்கவே வேண்டும். நிஜமாகவே சொல்கிறேன். சுதாகரன் சார் என்று சொன்ன ஒருத்தர் மீது சுடச் சுட டீயைக் கொட்டியிருக்கிறார். வருடா வருடம் அவர் ஒரு கூத்தடிப்பார். குன்னங்குடியில் இருந்து கிளம்பி பழனி வரை பாதயாத்திரை போவார். பதினோரு நாட்கள் நடப்பார்கள். கூட்டம் திரட்டப்படும். ஒவ்வொரு ஏரியாவிலும் பெண்கள் ஆரத்தி எடுக்கத் தயாராக இருப்பார்கள்.
நூறு ரூபாய்க்கு குறைவாகத் தட்டில் போடவே மாட்டார். வெளியில் அப்படி ஒரு இமேஜை வளர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இரவானால் அவர் அடிக்கும் லூட்டிகளுக்குப் பஞ்சமில்லை. பெரிய பெரிய தொழிலதிபர்களையெல்லாம் கொட்டு அடிக்கச் சொல்லி அதற்குத் தோதாக ஆடச் சொல்லுவார். இப்போது ரித்தீஸ் என்று அழைக்கப்படும் முகவை குமாரெல்லாம் அப்படி கொட்டுக்கு ஆட்டம் போட்டவர்தான். இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அவர்தான். ஒரு சிலரை குரங்கு போலத் துள்ளிக் குதிக்கச் சொல்வார். சிலரை நாய் போல தவழ்ந்து நடக்கச் சொல்வார். இத்தனையும் செய்தார்கள். உண்மையிலேயே சொல்கிறேன் நம்புங்கள். இதற்கு மேல் எழுதினால் அதை வேறொரு கணக்கில் சேர்த்து விடுவீர்கள் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
அப்படி இருந்த அவர் எப்படி ஆனார் என்பதையெல்லாம் பார்த்திருப்பீர்கள்தானே? உன் வீட்டில் இருந்து மட்டும்தான் லூசுகள் கிளம்பி வருமா? என் வீட்டிலும் இருந்து கிளம்பி வரும் பார் என ஜெயலலிதாவின் ஆன்மா நினைத்திருக்கும் போல. அதைத் தீபா செய்து வருவதாகவே தெரிகிறது. பெரிய வார்த்தைகளையெல்லாம் சொல்லவில்லை. நெருங்கிப் போய் நின்று பாருங்கள். நீங்களே வெளியே வந்ததும், ‘எங்கப்பா அந்த சரவணன் சந்திரன்’ எனத் தேடி வருவதற்கு உத்தரவாதம்.
தீபா மட்டுமல்ல பொதுவாகவே இதுபோல நிறைய லெட்டர் பேட் அமைப்புகள் தமிழகமெங்கும் இருக்கின்றன. ஐயாயிரம் ரூபாய் டொனேஷன் கொடுத்தால் பொறுப்பாக பொருளாளர் பதவியைத் தூக்கிக் கொடுத்து விடுவார்கள். சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் போல போகிற இடங்களில் எல்லாம் மட்டரகமான லாட்ஜை பிடித்துப் போடுவார்கள். பாவம் அவர்களும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறார்கள்? மத்தியான சாப்பாட்டிற்கு யாரைக் கரெக்ட் செய்யலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டே, ஆட்சியைப் பிடிப்பது குறித்த டிஸ்கஷன்கள் ஓடும்.
“நம்ம காளியப்பனுக்கு நீங்க பவர்புல்லான நிதித் துறையக் குடுத்திடணும் பாத்துக்கங்க. அவருக்கு பின்னால பெரிய கூட்டமே இருக்கு” என்பார் ஒருத்தர். அதன் ஆழ அகலத்தை விசாரித்தீர்கள் என்றால், முதல் நாள் அவர் ஒரு ஆஃப் வாங்கிக் கொடுத்திருப்பார் இவருக்கு. ஊரிலேயே பத்துப் பேர் இருக்கிற கூட்டத்தில் இருந்து முளைத்து வந்திருப்பார் காளியப்பன். வெள்ளையும் சொள்ளையுமாக அவர் பேரன் லவ்லி போட்டுக் கொண்டு கிளம்புகிற அழகைத் தெருவே நின்று வேடிக்கை பார்க்கும்.
“போறாம் பாரு வெறும்பய. இவனோட வேட்டி சட்டைய துவைக்கிறதுக்கு சோப் வாங்கக்கூட வழியில்லை” என மனைவிமார்களே கிண்டலடிப்பார்கள். அதையெல்லாம் காளியப்பண்ணன்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் குறிக்கோள் ஒன்றுதான். வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்து விட்டால், வரும் போது செலவுகள் போக இருநூறு ரூபாயாவது சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்ப வேண்டும். அவ்வளவுதான். கிண்டலல்ல இது. இதற்குப் பின்னால் ஒரு சமூகப் பிரச்சினையும் இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கிற எல்லா சாதிகளுமே தங்களுக்கான அரசியல் பிரவேசத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லோருக்குமே அரசியல் ஆசை இருக்கிறது. ஏதோ ஒருவகையில் தங்களை சக்திமிக்கவர்களாகக் காட்டிக் கொள்வதும் அதன் வழியாக சிறுசிறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள். வசதி படைத்தவர்கள் திமுக/அதிமுக என செட்டில் ஆகி விடுகிறார்கள். அந்த வாய்ப்புக் கிடைக்காதவர்கள் ரஜினி/விஜய்/அஜீத் என ரசிகர் மன்றங்களில் செட்டில் ஆவார்கள்.
அதிலும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் எட்டாம் படி கருப்பசாமி கோவில் பொங்கல் விழாக் கமிட்டித் தலைவர்களாக இருப்பார்கள். தரமான டிக்கெட்டுகள் எல்லாம் மேல் நோக்கி நகர்ந்து விடுவார்கள். அதிலும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் பாவம் என்ன செய்வார்கள்? அவர்கள்தான் சின்ன எம்.ஜி.ஆர் என கொட்டடித்து குத்தாட்டம் போடுவார்கள். நேற்றுகூட ஒரு டீவியில் தீபா பேரவையிலிருந்து ஒருத்தர் வந்து பேசிக் கொண்டிருந்தார். “காளியப்பண்ணே மதினி சௌக்கியமா இருக்காகலா” என கூவ வேண்டும் போல் இருந்தது.
ஆனால் இவர்களும் ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் ஒரு அமைப்பை நாடி வருகிறார்கள். அது துலங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இவர்களுக்குப் புரிவதேயில்லை. தொண்டர்கள் லூசாக இருந்தால் அது அந்த அமைப்புக்கு நல்லது. ஆனால் தலைவர்கள் அப்படி இருந்தால் என்னாகும்? பொதுவாகவே தமிழகம் முழுக்க சிறு சிறு வேலைகளை முடித்துக் கொடுக்கும் புரோக்கர்கள் என்கிற லேயர் உருவாகி விட்டது. அது ஒரு தொழிலாகவும் வளர்ந்துவிட்டது. அதைத் தப்பென்று சொல்வதற்கு நான் யார்? இவர்களுக்குத் தேவை ஒரு அடையாள அட்டை. அந்த அட்டையில் அவர்களின் பெயருக்குக் கீழே ஏதாவது எழுதியிருக்க வேண்டும்.
மதிக்கிறார்களோ/இல்லையோ, லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் போய் தூக்கி டேபிளில் போட வேண்டும். அங்கிருக்கிற ஏட்டையா, “வாங்க அப்படியே ஒரு வடைய கடிச்சிக்கிட்டே பேசுவோம்” என அழைத்துக் கொண்டு வெளியே போவார். இன்ஸ்பெக்டர் கண்ஜாடை காட்டியதையெல்லாம் காளியப்பண்ணன்கள் பார்த்தாலும் பார்த்தது மாதிரிக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். அதைப் போலவே நாமும் அதைப் பார்த்தாலும் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ளக்கூடாது. யானை வாழ்கிற காட்டில் எறும்பிற்கும் இடமிருக்கிறது என ஒரு வசனம் இருக்கிறது. அதுபோல செங்கோட்டை அண்ணன்கள் இருக்கிற காட்டில் காளியப்பண்ணன்களுக்கும் இடமிருக்கிறது. ஆனால் அடுத்த நிதியமைச்சர் என அறைக்குள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். பொதுவெளியில் வந்து அதைச் சொல்லும் போதுதான் மதினி திட்டுவதெல்லாம் நியாபகத்திற்கு வந்து தொலைகிறது. மொத்தத்தில் மதினி மார்களின் கதையை எழுதப் புறப்பட்டால் சந்தி சிரித்து விடும்.