சென்னை:
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய டி.டி.வி. தினகரன், “பொதுச்செயலாளர் சசிகலா அனுமதித்தால் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார். மேலும், “கட்சியின் ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டு அதன் வழிகாட்டுதலில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் தெரிவித்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக சிறையில் இருக்கும் வி.கே. சசிகலா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், “ஆர்.கே. நகரில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவது உறுதி” என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேசப்படுவதாவது:
“சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, தனது அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக அறிவித்தார். இதற்குக் காரணம், தான் சிறை சென்றாலும் கட்சி தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே.
ஆனால், கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றது செல்லாது என்று ஓ.பி.எஸ். அணி, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருக்கிறது. இது குறித்து சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருக்கிறது.
தவிர சசிகலாவையும் அவரால் துணைப்பொதுச்செயலாளரா நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனையும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவிலலை என்ற கருத்தே பரவலாக நிலவுகிறது.
இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட்டு “எப்படியாவது” வென்றுவிட்டால் தொண்டர்கள் அங்கீகாரம் கிடைத்தது போலாகிவிடும் என்று சசிகலா குடும்பம் நினைக்கிறது.
தவிர சசிகலா குடும்பத்திலேயே தேர்தலில் நின்ற அனுபவம் தினகரனுக்கே உண்டு. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பராளுமன்றத் தேர்தலில் பெரிய குளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் அவர். அடுத்து வந்த 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவரை ஜெயலலிதா அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார்.
இப்படி தேர்தல் அனுபவமும், பாராளுமன்ற அனுபவமும் கொண்ட தினகரனே ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சசிகலா அணி சார்பாக போட்டியிடுவார். இதன் மூலம் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதியில் வென்ற தினகரனே ஜெ.வின் வாரிசு என்று பிரச்சராம் செய்ய வாய்ப்பாக இருக்கும் என்று சசிகலா குடும்பம் கருதுகிறது ” என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.