சென்னை:
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா அணி மற்றும் திமுக தவிர பிறர் ஆதரவை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள செனனை ஆர்.கே. நகர் தொகுதயில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், சசிகலா அணி மற்றும் திமுக தவிர பிறர் ஆதரவளித்தால் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
“ஆர்.கே.நகரில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். அம்மா அவர்களின் உண்மையான விசுவாசிகள் கழக தொண்டர்கள் பெரும் வெற்றியை தேடி தருவார்கள். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று ஆட்சி செய்த அம்மா அவர்களின் வழியில் பணியாற்றுவேன்.
யாருடைய ஆதரவையும் நான் கேட்க வில்லை ஓ.பி.எஸ் எண்ணிடம் ஆதரவு கேட்டால் ஆலோசித்து முடிவு செய்வேன். சசிகலா அணி, திமுக தவிர பிறர் ஆதரவளித்தால் ஏற்பேன்.
சசிகலா தரப்பு அதிமுக அணியுடன் இணைந்தது பணியாற்ற விருப்பம் இல்லை. எனக்கு என்ன இடையூறு யார் ஏற்படுத்தினாலும் போட்டியிடுவதில் இருந்து
பின்வாங்க மாட்டேன்.
சசிகலாவின் சதிகார குடும்பத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் அவர்கள் அணியினர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.
எங்கள் அமைப்பின் நிர்வாகிகள் தேர்வில் குழப்பம் ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறு. இது குறித்து எனக்கும் எனது கணவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதாக கூறுவதும் சரியல்ல. அதிகார பூர்வ நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு விரைவில் வரும்
அம்மா அவர்கள் மரணத்தை பற்றிய சந்தேகத்தை நான் ஆரம்பம் முதலே வெளிப்படுத்தி வந்துள்ளேன். தற்போத வெளியான அறிக்கைகளை நான் ஏற்கவில்லை” இவ்வாறு தீபா தெரிவித்தார்.