மும்பை,
நடைபெற்று முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து நின்று சிவசேனா கட்சி அதிக இடங்களை பிடித்தது. இதன் காரணமாக மாநகராட்சி மேயராக சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முப்பை மாநகராட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 20ந்தேதி நடைபெற்றது. 227 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் சிவசேனா கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றியது.
கடந்த தேர்தலின்போது பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனா, இந்த முறை தனித்தே போட்டியிட்டு 84 வார்டுகளை கைப்பற்றியது.
ஆனால், மாநகராட்சி மேயருக்கு போதுமான அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து 31 உறுப்பினர்களை வைத்துள்ள காங்கிரஸ், 9 இடங்களை பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், 7 இடங்களில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வந்தது.
பாரதியஜனதாவும் மும்பை மாநகர மேயர் பதவியை பிடிக்க கடும் முயற்சி மேற்கொண்டது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த பதவிகளை கைப்பற்ற மொத்தம் 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில் சிவசேனாவின் சார்பில் போட்டியிட்ட விஸ்வநாத் மஹதேஷ்வர் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.