சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 4,98, 406 மாணவர்கள், 4,95, 792 மாணவிகள் இத் தேர்வை எழுதுகின்றனர்.

இது தவிர தனித்தேர்வர்களாக 43,824 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை இன்று எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51,658 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா தெரிவித்தார்.

தேர்வு மையங்களை கண்காணிக்க 6403 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரத்தில் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாளை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் எழுதிய விடைகளை தாங்களே கோடிட்டு அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.