அமெரிக்காவில் அகதிகள் நுழைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் தடை விதித்துள்ளார். அகதிகளை அனுமதிக்கும் பணி, 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

மெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஜனவரி 27–ந் தேதி, சிரியா நாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய காலவரையற்ற தடை விதித்தார். மேலும்  ஈராக் உள்பட 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 90 நாட்கள் தடை விதித்தும் ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார். ஆனால் அந்த உத்தரவுக்கு சியாட்டில் நகரில் உள்ள நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இதுதொடர்பாக விரைவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என டிரம்ப் சமீபகாலமாக கூட்டங்களில் பேசிக்கொண்டு வந்தார். அவர் கூறியபடி அகதிகளுக்குத் தடைவிதிக்கும் புதிய உத்தரவில் நேற்று அவர் கையெழுத்திட்டார். அதில், சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் ஏற்கனவே விசா பெற்று இருந்தால், அமெரிக்காவுக்கு வர தடை இல்லை. கடந்த ஜனவரி 27–ந் தேதி, தடை பட்டியலில் இடம்பெற்று இருந்த ஈராக், இந்த புதிய உத்தரவில் இடம்பெறாதது ஏன் என்று தெரியவில்லை.