டெல்லி:
மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி டெல்லி லண்டனை போல் மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் உத்தம் நகரில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்,‘‘பாஜ வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை தூய்மையாக பராமரி க்க அவர்களால் முடியவில்லை. கடந்த முறை 67 வார்டுகளில் வெற்றி வாய்ப்பை கொடுத்தீர்கள். இந்த முறை 3 வார்டுகளை கூட விட்டுவைக்க கூடாது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு ஆண்டில் லண்டனுக்கு நிகராக டெல்லி மாறுவதை பார்க்கலாம். டெல்லியை தூய்மையாக அரசு பாரமரிக்கவில்லை என்ற தவறான கருத்து நிலவுகிறது. நான் எங்கு சென்றாலும் குப்பைகள் அள்ளுவதில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு அரசாங்கம் காரணம் கிடையாது. டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தான் பொறுப்பு. கடந்த 20 ஆண்டுகளாக பாஜக.வும், காங்கிரசும் தான் மாநகராட்சிக்கு எதுவும் செய்யாமல் நிர்வாகத்தை கையில் வைத்திருந்தனர்’’ என்று குற்றம்சாட்டி பேசினார்.
மேலும், கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘வீட்டு வரி, விளம்பர பலகை, வாகன நிறுத்தம் போன்று பல வகைகளில் மாநகராட்சிக்கு வருவாய் வருகிறது. அதோடு டெல்லி அரசு ரூ. 2 ஆயிரத்து 800 கோடி வழங்கியது. இந்த நிதி எங்கே சென்றது?. ஏன் டெல்லி தூய்மையாக இல்லை. ஒரே ரோட்டை மூன்று முறை ஆவணத்திலேயே போட்டுவிட்டு பணத்தை ஏப்பம் விட்டுவிட்டனர்’’ என்றார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக பாஜ ஆளும் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநில அரசுகள் செய்யாத பணிகள் டெல்லியில் கடந்த 2 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெல்லியில் ஒழுங்குபடுத்தப்பட்ட காலனி பகுதிகளில் மட்டுமே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் கொள்கை இருந்தது.
ஆனால் நாங்கள் இதை மாற்றினோம். காலனி ஒழுங்குபடுத்தப்பட்டதா? இல்லையா? என்பது முக்கியமல்ல. அங்கு வசிக்கும் மக்கள் தான் முக்கியம் என்று முடிவு எடுத்தோம். அங்கு வாழ்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடிநீர், கழிப்பிடம், மின்சாரம், சாலை வசதிகள் தேவை’’ என்றார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் உத்தம்நகர் எம்எல்ஏ முகேஷ் சர்மா தலைமையில் அக்கட்சியினர் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசிய கூட்டத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி காட்ட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நகர வாசிகளை ஆம் ஆத்மி அரசு ஏமாற்றுவதாக கூறி அவர்கள் கெஜ்ரிவால் உருவ பொம்மையை எரித்தனர்.
சர்மா கூறுகையில், ‘‘அனைத்து தொடக்க விழாக்களும் கண் துடைப்பாகவே இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்து துப்புரவு பணி தொடக்க விழா நடந்துள்ளது’’ என்றார்.