டெல்லி:

அரியானாவில் போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை விற்று  பல கோடி ரூபாய் சம்பாதித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரியானா மாநிலம் குருக்ராம் என்ற ஊரில் பணம் கொடுத்தால் வாடிக்கையாளர்களுக்குத்  தேவையான பட்டப்படிப்புச் சான்றிதழ்களை தயாரித்து கொடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பான ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்குசென்று நடத்திய திடீர் ஆய்வில் போலி முத்திரையிடப்பட்ட பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இந்த முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்ட பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இதுவரை 1000க்கும் அதிகமான போலி மதிப்பெண் சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை ரூ20 ஆயிரத்திலிருந்து ரூ 5 லட்சம் வரை விலை நிர்ணயித்து விற்றுள்ளதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ambition institute என்ற பெயரில்  இந்தத் தொழிலை நடத்திவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.