ஐதராபாத்:
தெலங்கானாவில் பத்தாயிரம் ரூபாய்க்கு பெண்குழந்தையை விற்ற பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
ஐதராபாத் புறநகரில் வனிதாவும் அவரது கணவர் ஜவஹர்லாலும் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இப்ராஹிம்பட்டினத்தில் இருக்கும் தனியார் பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குநரும் டாக்டருமான நாரெல்லா சங்கரும், மருத்துவமனையின் சில ஊழியர்களும் குழந்தையை விற்றால் பணம் தருவதாக ஆசைகாட்டியுள்ளனர். அதற்கு குழந்தையின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களது பெண்குழந்தைக்கு ரூ.35000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு ரவி, வரலட்சுமி என்ற தம்பதிக்கு விற்க ஏற்பாடானது.
இந்தத் தொகையில் 10 ஆயிரம் ரூபாய் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டு எஞ்சிய பணத்தை மருத்துவமனை நிர்வாகம் பிரித்துக்கொள்வது என பேசி முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் குழந்தை விற்கப்படுவதாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மருத்துவர் நாரெல்லா சங்கர், ஊழியர்கள், மற்றும் குழந்தையின் பெற்றோரை கைது செய்தனர்.