கொழும்பு,
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் இரண்டு நாளில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறி உள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின்போது, கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நிலங்களை ராணுவத்தினர் கையகப்படுத்தினர்.
இந்த நிலத்தை மீட்டு தங்களுக்கு திருப்பி தரும்படி அந்த பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள்.
இதுகுறித்து இலங்கை எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் கூறியதாவது,
தமிழர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதி சிறிசேனாவுடன் விவாதித்ததாகவும், இரண்டு நாளில் அந்த நிலங்களை பாதுகாப்பு படையினர் திரும்ப ஒப்படைத்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தன்னிடம் உறுதி அளித்ததாகவும் கூறி உள்ளார்.
மேலும், மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் கால் பதிக்கும்வரை அவர்களுடைய போராட்டம் தொடரும் என தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.
கேப்பாபிலவில் 54 இடங்களுக்கு அரசாங்கத்தினால் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 42 இடங்களுக்கான பத்திரங்கள் முல்லைத்தீவு அரசாங்க அதிகாரியால் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்ததை தொடர்ந்து தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட போது, அவர்களுடைய சொந்த இடங்கள் திருப்பி அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
எனவே, மக்களின் விருப்பத்தை அறிந்து, அவர்கள் விரும்புகின்ற இடங்களில் அவர்கள் குடியமர்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று, புதுக்குடியிருப்பை சேர்ந்த 19 பேருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலம் இராணுவத்தினரிடம் இருக்கின்றது. அவற்றை மக்களிடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் தயாராகவே இருக்கின்றது. அந்த இடமும் விரைவில் விடுவிக்கப்படும்” எனவும் இரா.சம்பந்தன் கூறி உள்ளார்.