கோவை,

பாரதியஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குடும்பத்தினருடன்  3 நாள் பயணமாக கோவை வந்துள்ளார். அதையாட்டி கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த சிவராத்திரியன்று கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையத்தால் அமைக்கப்பட்டுள்ள 112 ஆதி யோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று ஈஷா மையத்தைப் பார்வையிட 3 நாள் பயணமாக, பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கோவை வந்துள்ளார். அவர் 3 நாட்கள்  அங்கே தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

நேற்று கோவை வந்த அத்வானியை  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கார்மூலம் ஈஷா யோக மையத்தை சென்றடைந்த அத்வானி, தியான லிங்கத்திலும், லிங்க பைரவி சன்னதியிலும் தரிசனம் செய்தார். இரவு அங்கேயே தங்கிவிட்டார்.

இன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிலையை இன்று அவர் பார்வையிடுகிறார்.

அத்வானியின் கோவை வருகையையொட்டி, கோவை முழுவதும்  பல்வேறு பகுதிகளில்  போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை வரும் அத்வானியை கொலை செய்வதற்காக,  1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை நகரை உலுக்கும் வகையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 19 குண்டு வெடிப்புகள் நடந்தன. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.