டெல்லி:

லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் ரஜினி நடித்த ‘ரோபோ 2’ ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் சங்கரின் ‘ரோபோ 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது.

இந்த திரைப்படம் தற்போது ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. விநியோக உரிமை வழங்கும் சமயத்தில் இந்த காப்பீட்டு தொகை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் லைகா நிறுவனம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

இவ்வளவு அதிக தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் ரோபோ 2 பெற்றுள்ளது.
முதன் முதலில் 1999ம் ஆண்டு ஐஸ்வர்யாராய் நடித்த தால் திரைப்படம் தான் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திரைப்படங்கள் இன்சூரன்ஸ் செய்யும் வழக்கம் சாதாரணமாக இருந்தாலும், காப்பீடு செய்யும் தொகை அதிகளவிலேயே இருந்து வருகிறது.

2014ம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘கிக்’ திரைப்படம் ரூ. 300 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. படம் வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டும் வகையில் இந்த இன்சூரனஸ் செய்யப்படுகிறது. தயாரிப்பு, விளம்பரம், விநியோகம் என்று 3 வகைகளாக பிரித்து இன்சூரன்ஸ் செய்யப்பட்டு வருகிறது.

பாகுபலி ரூ. 200 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெளிவரவுள்ள பாகுபலி 2 ரூ. 250 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா ரூ. 300 கோடி வரை இன்சூரன்ஸ் செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வருவாய் இழப்பபை இந்த படம் சந்தித்தது. படம் வெளியாவதிலும் 4 முறை தடங்கல் ஏற்பட்டது. இந்த இழப்பை இன்சூரன்ஸ் தான் ஈடுகட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.