“கெட்டபையன் சார் இவன்”..
இந்த வார்த்தையை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? பழைய ரஜினி பட வசனம்தான் இது.
ஏற்கெனவே அவரது வசனங்களில் இருந்து, ‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’, ‘கதம் கதம்’, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ போன்றவை திரைப்பட தலைப்புகளாகி இருக்கின்றன.
இப்போது, “கெட்ட பையன் சார் இவன்” வரப்போகிறது.
‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் காந்தி பாபுவாக நம் மனதில் பச்சக் என்ற ஒட்டிக்கொண்ட நட்டிதான் இந்த படத்தில் ஹீரோ.
படத்தை தீபக் சுந்தர்ராஜன் என்கிற புதிய இயக்குநர் இயக்க இருக்கிறார்.
சிறந்த இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என்று பெயர் எடுத்த ஆர். சுந்தர்ராஜனின் மகன்தான் இந்தத் தீபக்.
இயக்குநர் விஜய்யிடம் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இன்னொரு வாரிசும் இந்த படத்தில் அறிமுகமாகிறார்.
ஆம்… இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை காஷிஃப், முதன் முதலாக இந்த படத்துககு இசை அமைக்கிறார்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
அதே நேரம், படத்தின் டைட்டில்தான் பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது.
“கோடிக்கணக்கில் செலவு செய்து பல மாதங்கள் உழைத்து படத்தை தயாரிக்கிறார்கள். இரண்டு நாள் யோசித்து ஒரு நல்ல தலைப்பு வைக்க முடியாதா…” என்பது பலரது ஆதங்கம்.
இப்படி ஆதங்கப்படுபவர்களில் ஒருவரது பேச்சை காது கொடுத்துக் கேட்டோம். நீங்களும் கேளுங்களேன்:
“ஒரு காலத்தில் படத்தின் பெயரே, கதையைச் சொல்லிவிடும். உதாரணம், கடற்கரை தாகம்.
அதாவது அருகில் பெருமளவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் அதனால் தாகத்தைப் போக்க முடியாது என்பதுதான் படத்தின் கரு. அதற்கேற்ற டைட்டில் அது.
தவிர “நல்லவன் வாழ்வான்” “ ஊருக்கு உழைப்பவன்” என்றெல்லாம் மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பது போன்ற டைட்டில்கள் வந்தது ஒருகாலம்.
ஆனால் ரஜினியின் ஆரம்ப காலத்திலேயே டைட்டில்கள் சீரழியத்துவங்கின.
“பொல்லாதவன்” என்று ஆரம்பித்து ஏகப்பட்ட நெகட்டிவ் டைட்டில்கள்.
இந்த நிலையில்தான் தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு என தி.மு.க. அரசு சொன்னவுடன், அனைவரும் தமிழுக்கு மாறினார்கள். ஆனால் அதிலும் பிற மொழி வார்த்தைகளை வைத்துவிட்டு, இதுதமிழ்தான் என்று “செல்வாக்கை” பயன்படுத்தி வரிவிலக்கு பெற்றவர்கள் பலர்.
கருணாநிதியின் பேரன் தயாநிதி அழகிரி, தான் தயாரித்த ஒரு படத்துக்கு தமிழில் “வ” என்று பெயர் வைத்தார். ஆனால் அதன் பெயரை, “– குவார்ட்டர் கட்டிங்” என்றே விளம்பரப்படுத்தினார். “சட்டப்படி” வரிவிலக்கும் பெற்றார்.
இன்னொரு படம்.. வி.எஸ்.ஓ.பி.! அதாவது பிரபல மதுபாட்டில் பெயரை படத்தின் டைட்டிலாக வைத்தார்கள். கேட்டால், “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க..” என்பதின் சுருக்கம்தான் வி.எஸ். ஓ.பி. என விளக்கம் சொன்னார்கள்.
இதெல்லாம் காலக்கொடுமைதானே..” என்று ஆதங்கப்பட்டவர்.. “பேசாம, இப்படி ஒரு டைட்டில் வச்சா என்ன…” என்று ட்விஸ்ட் கொடுத்து சொன்னார்:
“இவனுங்களை திருத்தவே முடியாது சார்!”