டெல்லி:
ஆதார் சர்வரில் சட்டவிரோதமாக நுழைந்து பரிமாற்றம் செய்ததாக ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் யுஐடிஏஐ நிறுவனம் சார்பில் டெல்லி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளது. அதில் ஆக்ஸிஸ் வங்கி, மும்பையை சேர்ந்த சுவிதா இன்போ சர்வ், பெங்களூருவை சேர்ந்த இமுத்ரா ஆகிய ஆதார் சர்வரில் அத்துமீறி சட்டவிரோதமாக ஊடுறுவி பரிமாற்றம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அந்நிறுவனங்களு க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முன்னதாக ஆதாரின் பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி பரிமாற்றங்கள் நடந்தை யுஐடிஏஐ கண்டுபிடித்தது.
மொத்தம் 397 பரிமாற்றம் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நடந்திருந்தது. கடந்தாண்டு ஜூலை 14ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை இந்த பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் 194 பரிமாற்றங்கள் ஆக்சிஸ் வங்கியிலும், 112 பரிமாற்றங்கள் இமுத்ரா மற்றும் 91 பரிமாற்றங்கள் சுவிதா நிறுவனம் மூலம் நடந்திருந்தது.
இது குறித்து சுவிதா இன்போ சர்வ் நிறுவன சிஇஓ கூறுகையில்,‘‘பரிசோதனையின் போது 4 பரிமாற்றங்கள் அனுமதியில்லாத வழித்தடத்தில் சென்றுவிட்டது. இதனால் எவ்வித நிதியிழப்பும் ஏற்படவில்லை. இது ஒரு பரிசோதனை பரிமாற்றம் தான். ஆக்சிஸ் வங்கியுடன் ஆதார் இணைப்பு திட்டங்களை செயல்படுத்து வருகிறோம்’’ என்றார்.
ஆக்சிஸ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ யுஐடிஏஐ வசம் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. எங்களது வர்த்தக தொடர்பாளர் சுவிதா மூலம் மேற்கொண்ட ஒரு பரிசோதனையின் போது யுஐடிஏஐ சர்வர் இணைப்பு கிடைத்துள்ளது. இதனால் எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்’’ என்றார்.