சென்னை:

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்களிடம் பல்வேறு கேள்வி எழுந்துள்ளன. இதற்கு விடை சொல்லும் விதமாக மத்திய, மாநில அரசுகள் நீதிவிசாரணை நடத்தவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தில் பெறுவது உறுதி  என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை ஒட்டி ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பன்னீர்செல்வம் வழங்கினார். இவருடன் மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் உரையாற்றிய ஓபிஎஸ், “எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் நிறைய இன்னல்களை சந்தித்த ஜெயலலிதா  கட்சியை அரும்பாடுபட்டு வளர்த்ததாக கூறினார்.

மேலும் யாருடைய கைகளில் கட்சியும் ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாதுகாத்து வைத்திருந்தாரோ அவர்களது கட்டுக்குள் இப்போது கட்சியும் ஆட்சியும் சிக்கியிருப்பதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கட்சியையும் ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்கும் வகையில் ஒரு தர்மயுத்தத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

சாமானிய அதிமுக தொண்டர்களின் கைகளில் கட்சியும், ஆட்சியும் வரும்வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.