புது தில்லி, பிப் 10.
குறைந்த மூலதன செலவினம் மற்றும் மலிவான கடன்வசதி காரணமாகச் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் ₹.2.97 க்கு விற்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 750 மெகாவாட் திறன் கொண்ட ரேவா சோலார் பார்க்-ல் தயாரிக்கப்படும் மத்தியப் பிரதேச அரசு மற்றும் இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் (SECI) ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ 2.97 க்கு குறைந்துள்ளது.
மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதுகுறித்து டிவிட்டரில் “இந்தியா சுத்தமான மின்சக்தி தயாரிப்பு குறித்த தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதன் பலனாய் சூரிய மின்சாரம் ரூபாய் 2.97 / அலகு விற்கப்படவுள்ளது” எனத் தகவல் வெளியிட்டுள்ளார்.
” குறைந்த மூலதன செலவினம் மற்றும் மலிவான கடன்வசதி காரணமாகச் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் விலை மிகவும் மலிந்துள்ளது. ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கான மூலதன செலவு ரூ.5-6 கோடியில் இருந்து ரூ.4 கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது. இதேபோல், 10-12 சதவீதமாக இருந்து வட்டி வீதங்கள் 8.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இவை தான் இந்த விலைகுறைவிற்கான காரணம் ” என ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
750 மெகாவாட் மூன்று அலகுகளாக (யூனிட்) பிரிக்கப்பட்டு மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏலத்தில், முதல் ஆண்டு கட்டணமாக, இந்திய நிறுவனங்கள்: மஹிந்திரா நிறுவனம் ( யூனிட்-1) , ரூ.2,979 கட்டணமும், ஆக்மி( யூனிட் 2) ரூ. 2,970 கட்டணமும் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த நிறுவனமான சோலென்பெர்க் ( Solenberg) (யூனிட்-3) ரூ. 2,974 கட்டணமும் குறிப்பிட்டுள்ளன” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அடுத்த 15 ஆண்டுகளுக்கு வருடாவருடம் ஐந்து பைசா விலையுயர்வு இருக்கும் ” என அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம், என்டிபிசி-யின் பத்லா சோலார் பார்கில் 70 மெகாவாட் சூரிய நிலையத்தை அமைக்கப் பின்லாந்து சேர்ந்த எரிசக்தி நிறுவனம் Fortum Finnsurya ஒப்பந்தப்புள்ளியில் ரூ 4.34 /அலகு எனக் குறைந்த விலையைக் குறிப்பிட்டு ஏலத்தை வென்றது.
இந்நிலையில், தமிழக அரசின் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் (TANGEDCO) அதானி நிறுவனத்திடமிருந்து ரூபாய் 7.00 கொடுத்து மின்சாரம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட் ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அதிமுக தலைமைக்கு(மறைந்த முதல்வர் ஜெ) கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.
தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.
சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு. 648 மெகாவாட் மின்சாரத்தை இந்த விலைக்குக் கொள்முதல் செய்வதால் அரசு கஜானாவிற்கு, 7,576 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. தற்போதைய ரூபாய் 2.97-வுடன் ஒப்பிட்டால், தமிழக அரசிற்கு எவ்வளவு நஷ்டம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தை தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – எனத் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ். நீதி தாமதவாவதால், தமிழக மக்களின் நிதி கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது.