பெங்களூரு:
கர்நாடகாவில் தார்வாட் மாவட்டம் மானாகண்டி என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் குமார் மார்வாத் என்ற 17 வயது இளைஞர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவரை நாய் கடித்துவிட, மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல் மிகவும் மோசமடைந்தது. அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர், அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
வீட்டுக்கு வந்த பிறகு, அந்த இளைஞரது உடல் நிலை மிகவும் மோசமானது. ஒருகட்டத்தில் எந்தவித அசைவும் இல்லை.
இதனால் அவர் இறந்துவிட்டதாக கருதி உறவினர்களுக்கெல்லாம் தகவல் அளிக்கப்பட்டது. அவரது உடலுக்குச் சடங்குகளை செய்து சுடுகாட்டில் புதைக்க தூக்கி சென்றனர்.
அப்போது திடீரென்று அந்த பிணம் – அதாவது இளைஞர் – கண்விழித்து எழுந்து உட்கார்ந்தார். இதைக்கண்ட மக்கள் பீதியடைந்து அலறியடித்தபடி, ஓடத் தொடங்கினர். அந்த இளைஞரோ, தான் சாகவில்லை என்று கூறி அனைவரையும் அழைத்திருக்கிறார். .
அதன்பிறகு, ஊர்மக்கள் அந்த இளைஞரை, மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்குச் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
பிழைக்கவே மாட்டார் என்று தாங்கள் கருதிய இளைஞர், ஓரளவு உடல் தேறி மீண்டும் சிகிச்சைக்கு வந்தது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிது. தற்போது அந்த இளைஞருக்கு சிகிச்சை அளி்க்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, “சரிவர சிகிச்சை அளிக்காமல், அந்த இளைஞரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் மருத்துவர்கள்” என்ற புகாரும் கிளம்பியுள்ளது.