டில்லி,
வரும் ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநி லங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரியை வரிவிதிப்பை அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வரும் ஜூலை மாதம் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நேற்று உதய்ப்பூரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 10-ஆவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால், முதல் 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி,
மத்திய சரக்கு-சேவை வரி மசோதா, ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா, மாநில சரக்கு-சேவை வரி மசோதா ஆகிய மூன்று மசோதாவுக்கும் மார்ச் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், இந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அருண்ஜேட்லி குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் அமல் படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.