சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோட்டையை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரும் வழி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனை வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியும் தடுத்து, அண்ணாசாலை வழியாக திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் அண்ணா சமாதி அருகே கடற்கரை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
வாக்கெடுப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபைக்குள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்க சட்டசபை காவலர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டசபைக்கு வெளியே கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோட்டையை சுற்றி உள்ள 10 வாசல்களிலும் செக்போஸ்ட்டுகள் அமைத்து போலீசார் கடுமையான சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் செல்லும் வாகனங்களும் சோதனை நடத்தப்பட்டே உள்ளே அனுப்பப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுடன் அவரது டிரைவர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வேறு யாருக்கும் அனுமதி இல்லை.
இதற்கிடையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வளைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதால், கடற்கரையிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அதிரடிப்படை போலீசாரும் சீருடையில் பெருமளவில் அணிவகுத்து நிற்கின்றனர்.
இதன் காரணமாக சென்னை சாந்தோம் லைட்ஹவுஸ் முதல் பாரிமுனைவரை எங்கு நோக்கிலும் போலீசாரின் தலைகளே தென்படுகின்றன.