பெங்களூரு:
மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையம் கட்டவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், குடிநீர், நீர்பாசனம், மின்சார உற்பத்திக்காக 5,912 கோடி ரூபாய் செலவில் 66.5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்க மேகதாது அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துள்ளது.
மத்திய நதிநீர் ஆணையத்திற்கும், காவிரி கண்காணிப்பு குழுவிற்கும் அனுப்பப்படும். மத்திய சுற்று சூழல் வனத்துறையிடமும் அனுமதி பெறப்படும். 441.2 மீட்டர் உயரத்தில் 66.5 டி எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் திறன் உடைய அணை கட்டப்படும். ஆர்.எஸ். அணையை விட பெரிதாக இருக்கும்.
39.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் என்றார். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழகத்தில் தற்போது வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்கள் எதிர்காலத்தில் பெருமளவு பாதிக்கப்படும். ஏற்கனவே பருவமழை பொய்த்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. அணை கட்டினால் டெல்டா விவசாயம் கேள்விக் குறியாகும்.