சியோல்:

சாம்சங் நிறுவன துணைத் தலைவரை ஊழல் வழக்கில் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய பணக்கார குடும்பத்துக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவன தலைவர் லி குன் ஹீயின் மகனும், சாம்சங் நிறுவன துணை தலைவருமான 48 வயது லீ ஜே யோங்கை கைது செய்ய சியோல் மாவட்ட நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு தொழில் துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தென் கொரியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் சாம்சங் நிறுவனத்தின் மீதான இந்த நடவடிக்கை உலக தொழில் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தென் கொரியா நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தொழில் ஜாம்பவான்கள் செய்யும் ஒயிட் காலர் குற்றங்களு க்கு நீதித்துறை கருணை காட்டி வந்த வரலாறு தான் அங்கு இருந்திருக்கிறது.

லீயை கைது செய்ய போதுமான காரணங்களும், ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதனால் 20 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து சியோல் அருகே உள்ள ஒரு தடுப்பு மையத்தில் லீ தடுத்து நிறுத்தப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்ட நீதிமன்ற வள £கத்தில் நடந்த 7 மணி நேர விசாரணைக்கு பின் அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

‘‘இதை எதிர்த்து போராடுவோம். எங்கள் பக்கம் உள்ள உண்மைகளை நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது எடுத்துரைப்போம்’’ என்று சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை இவர் ஏற்றார்.

தென் கொரிய அதிபராக இருந்த பார்க் கியூன் ஹை இதே ஊழல் புகாரில் சிக்கி கடும் எதிர்ப்புக்கு பிறகு பதவி விலகினார். இவரும், இவரது நண்பர் சோய் சூன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இதே வழக்கில் தற்போது சாம்சங் துணைத் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.