டில்லி:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்வர் ஆனார். அந்த காலகட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்த்தாக ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.
அடுத்து வந்த 1996ம் ஆண்டைய சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்று அக் கட்சித் தலைவர் கருணாநிதி முதல்வர் ஆனார். அவரது காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.
நீண்டகால சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா தர்பபு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. இரு தரப்பையும் விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்தது. இந்த நிலையில், “இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தீர்ப்பளிக்க வேண்டிய நீதிபதி இன்று விடுமுறையில் சென்றுவிட்டதால் நாளை அல்லது மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் நாளை காலை தீர்ப்பு அளிக்கப்படு்ம் என்று தகவல்கள் தெரிவிப்பதாக, என்.டி.டி.வி. தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மறைந்த ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கர்நாடக அரசு கோரியது குறிப்பிடத்தக்கது.
தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வர் பதவியை நோக்கி தீவிரமாக காய் நகர்த்தி வரும் வேளையில் வர இருக்கும் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.