கலிபோர்னியா:

மெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மநபரால்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல்  மாவட்டத்தைச் சேர்ந்தவர் வம்சி ரெட்டி. 27 வயது கணினி பொறியாளரான இவர், கடந்த 2015 ம் ஆண்டு வேலைக்காக அமெரிக்கா சென்றார்.

கலிபோர்னயாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிலதினங்களுக்கு முன் பணிமுடித்து தங்கும் இடத்துக்கு காரில் வந்துகொண்டிருந்த வம்சி ரெட்டியை மர்மநபர் ஒருவர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.  அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் வம்சி ரெட்டி ஆந்திராவில் இருக்கும் தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், ட்ரம்ப் அதிபரானதும் வெளிநாட்டினருக்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில்  வேலைதர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெண்ணின் காரை சிலர் துப்பாக்கி முனையில் கடத்தியதாகவும், அந்த விவகாரத்தில் வம்சிரெட்டி தலையிட்டதால் கார்கடத்தல் காரர்கள் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்க போலீசார் கொலைதொடர்பாக விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

வம்சிரெட்டியின் உடலை அவரது அவரது ஊருக்குக் கொண்டுவர தெலங்கானா அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி ராமாராவ் தெரிவித்துள்ளார்.