அ.தி.மு.க.வில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு வரும் நிலையிலும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சமீபத்தில் சட்டமன்ற குழு தலைவராக அக் கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து விரைவில் அவர் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என்பது உறுதியானது. தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
இதையடுத்து, சென்னை பல்கலையின் நூற்றாண்டு விழா மண்டபத்தில், சசிகலா முதல்வராக பதவியேற்கும் விழாவை நடத்த திட்டமிட்டு பணிகள் நடக்க ஆரம்பித்தன.
இதற்கிடையே, அக் கட்சியின் மூத்த தலைவர்கள் பி.ஹெச்.பாண்டியன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். சசிகலா முதல்வர் ஆகக்கூடாது என்றும் கூறினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இரவோடு இரவாக செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்தார் சசிகலா. ஓ.பி.எஸ். பின்னணியில் தி.மு.க. இருப்பதாகவும், கட்சியில் அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
தன்னை பதவியில் இருந்து நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
இப்படி அ.தி.மு.க.வுக்குள் உச்சகட்ட பரபரப்பு நிலவி வரும் நேரத்தில், சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் தொடர்ந்து விழாவுக்கான பணிகள் நடந்துவருகின்றன.
ஏற்கெனவே இந்த பணிகளை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் பார்வையிட்டுச் சென்றனர். இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து நடந்த பணியை, கட்சி பிரமுகர்கள் வந்து ஆய்வு செ்ய்தனர்.
அதே போல, ஆளுநர் வித்யாசாகர் ராவின் இன்று தமிழகம் வர இருப்பதாகவும், இன்று அல்லது நாளை சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்றும் சசிகலா தரப்பில் இப்போதும் சொல்லி வருகிறார்கள்.
ஓபி.எஸ். தான் அளித்த ராஜினாமா கடித்ததை வாபஸ் பெற்றால், சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியிருக்கும். தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலவுக்கு ஆதரவாக இருப்பது போல அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடக்கும்போது பலர், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
தற்போது தமிழக அரசியலில் மிக அசாதாரணமான சூழல் நிலவுகிறது.