அரியலூரைச் சேர்ந்த தலித் சிறுமி நந்தினி, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். இதற்கு சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜனவரி 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு கீழமாளிகையைச் சேர்ந்த “இந்து முன்னணி” அமைப்பின் மணிகண்டன்(26) , அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கூறப்படுவதாவது:
இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன், திருமணம் செய்வதாக ஆசைவைர்த்தை சொல்லி நந்தினியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். இதனால் நந்தினி கர்ப்பமாகியிருக்கிறார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நந்தினி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் மணிகண்டனோ, தலித் சமுாயத்தைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்திருக்கிறார். ஆனாலும் நந்தினி தொடர்ந்து வற்புறுத்தவே, அவரை தனது “இந்து முன்னணி” அமைப்பின் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார். மேலும், நந்தினியின் பெண் உறுப்பை அறுத்து ஆறுமாத கருவை எடுத்து வீசியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து பெரிய அளவில் பேசப்படவில்லை. குற்றவாளிகள் என்று கூறப்பட்டவர்களையும் ஆரம்பத்தில் காவல்துறை கைது செய்யவில்லை. பிறகு மக்கள் திரள் போராட்டங்கள் நடந்தபிறகு மணிகண்டனை காவல்துறை கைது செய்தது.
இதற்கிடையே, மணிகண்டனுக்கு ஐடியா கொடுத்து மூளையாக செயல்பட்ட அரியலூர் மாவட்ட இந்துமுன்னணி தலைவர் ராஜசேகரை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேகுடன் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் நெட்டிசன்களால் ஆயிரக்கணக்கான பதிவுகள் பிதவிடப்பட்டு வருகிறது.
இதே ஹேஷ்டேகில் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன், “நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை. குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இவரது பதிவை வரவேற்கும் விதமாக ட்வீட்டாளர்கள் பலரும் கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணகான பதில் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.