லக்னோ,
உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.
சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக, அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், உ.பி.முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய தலைவரான அகிலேஷ் யாதவும் களத்தில் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
பிப்ரவரி – 11ந்தேதி தொடங்கி மார்ச் 8ந்தேதி முடிவடைகிறது. அதையடுத்து மார்ச் – 11ந்தேதி ஓட்டு எண்ணிகைக்கை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
தேர்தலையொட்டி சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று ஆக்ரா வடக்குப் பகுதியில் 12 கி.மீ. தூரத்துக்கு ராகுல் மற்றும் அகிலேஷ் இருவரும் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்கள்.
இந்த பிரசாரத்தின்போது சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களை பார்த்து ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் கை அசைத்தபடி சென்றனர்.
ஆக்ரா தொகுதி பா.ஜனதாவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாகும். ஆனால், தற்போது இந்த தொகுதி மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அகிலேஷ்யாதவ், “ பா.ஜனதா கட்சி இந்த நாட்டு அரசியலையும் நாட்டு மக்களையும் மோசடி செய்கிறது. பா.ஜனதா தலைவர்கள் பேசும் போது விஷத்தை கக்குகிறார்கள்.
நானும், ராகுல் காந்தியும் அவர்களின் மோசடி அரசியலை தோற்கடிக்க விரும்புகிறோம். இதற்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறோம். உத்தரப்பிரதேசத்தில் எங்கள் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.
எங்களது ஆட்சி நாட்டின் அரசியலை மாற்றி அமைக்கும். எங்கள் நோக்கத்துக்கு ஆதரவு அளித்த ராகுல் காந்திக்கு நன்றி என்றார்.
அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி பேசினார். அவர் பேசியதாவது, எங்கள் கூட்டணி பா.ஜனதாவை யும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் இந்த மாநிலத்தை விட்டு விரட்டும் வகையில் அமைந்து உள்ளது.
மக்களிடையே பிரிவினை மற்றும் துவேஷத்தை பா. ஜனதா பரப்பி வருகிறது. மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணி செயல்படும் என்றார்.
உ.பி.யில் தற்போது மும்முனை போட்டி நிலவி வருகிறது. கடந்தமுறை தனித்து நின்ற காங்கிரஸ் இந்த தடவை சமாஜ்வாதியுடன் கூட்டணி சேர்ந்து ஒரே அணியாகவும், பா.ஜனதா ஒரு அணியாகவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கிறது.