கோல்கட்டா,
மாநில அரசின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள். உங்களுடைய அறிவுரை எங்களுக்கு தேவையில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.
வாய் ஜாலம் காட்டுவதை விட்டுவிட்டு செயலில் வேகத்தை காட்டுங்கள் என்று மத்திய அரசை மம்தா காட்டமாக தாக்கினார்.
மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிவுரை தருவதை விடுத்து, அதற்குத் தேவை யான நிதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கல்த்தாவில் நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்து சம்மேளனக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
மத்திய அரசு கடந்த நவம்பர் அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிராமப்புறங்க ளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை.
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை கூறி வருகிறது; அதற்கு தேவையான நிதியை, முதலில் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய அரசு வாய் ஜாலம் காட்டுவதை விட்டுவிட்டு செயலில் வேகத்தை காட்டுங்கள். செயலில் வேகம் காட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று காட்டமாக பேசினார்.
மேலும் கிராம பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருவது, மாநில அரசுகள் தான். மாநிலங்களில் மத, இனக் கலவரங்கள் ஏற்படுவதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.