ஷகிலா பேட்டி: நிறைவு பகுதி
அன்னிக்கு நடிச்சதுமாதிரியுள்ள கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வந்தா இப்போ நடிப்பீங்களா?
இனி அந்த மாதிரி படங்களுக்கு மார்க்கெட் உண்டா? இப்போ எல்லாமே இண்டர்நெட்டுல கிடைக்குதுதானே. மட்டுமல்ல இனி இந்த வயசுல போய் அந்தமாதிரி கிளாமர் கேரக்டர்களில் நான் நடிக்கவும் மாட்டேன். ஆனா என்னைப்போல வேற யாராவது அந்த மாதிரி நடிக்க வர வாய்ப்பு உள்ளது. காரணம் செக்ஸ் எல்லோருக்கும் விருப்பமானது. செக்ஸ் உணர்வின் சின்ன விருப்பத்திற்காக அவர்கள் எனது அல்லது மத்தவங்க படத்தை பார்க்கலாம்.
செக்ஸ் நடிகைதானே ஷகீலா.. எப்படி வேணும்னாலு நடந்துக்கலாம்னு உங்ககிட்டே யாராச்சும் மோசமான ரீதியில் நடந்திருக்காங்களா?
அதற்கு நான் சம்மதித்ததே இல்லை. எனக்கு தனி பாதுகாவலர் உண்டு. இருந்தாலும் சிலவேளை…. கன்னடத்தில் சாது கோகிலமும் நானும் நடித்த ஒரு ஷூட்டிங்க்.. சுத்தி கொஞ்சம் பசங்க வந்து நின்னாங்க.. ஸ்கூல்ல படிக்கிற பசங்கன்னு நினைக்கிறேன். திடீர்னு என்னோட முதுகில கிள்ளு னான் ஒரு பையன். சாது கோகிலா என்கிட்டே கேட்டா, ”நான் சொன்னேன்ல பசங்களை நம்பக்கூடாதுன்னு”
வெளியூர்ல என்னோட சினிமா ஷூட்டிங் நடந்துச்சுன்னா பயங்கர கூட்டம் கூடும். பசங்க உத்து உத்து பார்த்துட்டே இருப்பாங்க. உடை மாத்தணும்னா நான் காரெடுத்துட்டு வெளியே வந்து உடை மாத்துவேன். சிலவேளை நான்கைந்து கிலோமீட்டர்தூரம் கூட வந்திருக்கேன். மறைவான இடம் இல்லைன்னே பக்கத்துல உள்ள வீட்டுல போய்,”எக்ஸ்யூஸ்மீ..துணி மாத்தணும்னு” கேட்டு உடை மாற்றுவேன்.
உங்களுடன் நடிச்சவங்ககூட இப்போ தொடர்பு உண்டா?
முதல் முதலா சில்க் சுமிதாவுடன் நடிச்சேன். அவங்க என்னை மைண்ட் செய்யவே இல்லை. என்னை அடிப்பது போல் சீன். இது பத்தி அவங்ககிட்டே,”இந்த அடிக்குறதுன்னா எப்படி?”ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க,”ஷாட்டில் வரும்னு “ சொன்னாங்க.
ஷாட் எடுக்கத்துவங்கியதும் அவங்க கையை பலமா வீசி என்னோட கன்னத்துல அடிச் சாங்க. எனக்கு வலியில் உசிரு போயிடுச்சு. கோபப்பட்டு நான் கேட்டேன், ”இவரு என்ன பாரதி ராஜா வான்னு” சில்க் சுமிதாவுக்கு என்மீது பொறாமை. அவருக்கு தெரிந்திருக்க லாம் நான் அவரை விட பெரும் புகழ் அடைவேன் என்று.
மோகன்லாலுடன் நடிச்சீங்கல்ல..
லாலேட்டன் சூப்பர். அவர் சும்மா இல்ல சூப்பர் ஸ்டார் ஆனது. அவருக்கு ஈகோ கிடையாது. சோட்டா மும்பையில் என்னை நடிக்க கூப்பிட்டப்ப, ”எனக்கு இவ்வளவோ பெரிய வசனம் ஒண்ணும் வேண்டாம்”னேன். அதற்கு அவர்,”பயப்படஒண்ணுமில்லை”ன்னு எனக்கு தைரியம் தந்தார். நான் அவரை மதிக்கிறேன். என்னோட இதயத்தில் அவருக்கு சிறப்பான ஒரு இடம் உண்டு.
மலையாள சினிபீல்டில் நண்பர்கள் உண்டா?
குளிர்காற்று படத்தில் நடித்தபோது நடிகர் பாபுராஜுடன் நல்ல பழக்கம். அவர்மட்டுமே அங்கே எனக்கு பெஸ்ட் பிரண்ட். வேற யாருமில்லை
கமல்ஹாசனை உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு முன்னாடி சொல்லியிருந்தீங்க?
ரொம்ப ரொம்ப புடிக்கும். அடுத்த ஜென்மத்தில் அவரோட தங்கச்சியா பொறக்கணும். இப்ப கூட எனக்கு அவரை “அண்ணா”ன்னு கூப்பிட ஆசை. ஆனா எனக்கு போன் பண்ணனும்னா பயம். போன் பண்ணினாலும், நேரில் பேசினாலும் பேசுவாருங்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நேரம் வர்றப்ப அவர்கிட்டே பேசணும்.
மலையாளத்தில் சினிமா டைரக்ட் பண்ணப்போறீங்கன்னு முன்னாடி சொன்னீங்க…?
அது நடக்காதது எனக்கு வருத்தம்தான். அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கு நந்திதா தாஸை நடிக்க வைக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா தயாரிப்பாளருக்கு நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு ஆசை. அதனால அந்த சினிமா டைரக்ட் பண்ற வேலை தொடந்து நடக்கவில்லை. அப்புறம் தெலுங்கில் ஒரு சினிமா டைரக்ட் செய்தேன். அது எட்டு நாள் ஓடிச்சு. ஆனா இன்றைக்கு ஒரு சினிமா எட்டு நாள் ஓடிச்சின்னா போட்ட முதல் வட்டியோட திரும்பி வந்திரும்.டைரக்ஷன் ரொம்ப சிரமமான வேலை. நம்மால இனி முடியாது.டைரக்ஷன் பக்கமே இனி தலை வைச்சுப்படுக்க மாட்டேன்.
சில்க் சுமிதா தற்கொலை பண்ணுனாங்க. மலையாளத்தில் செக்ஸ் நடிகையாக முத்திரை குத்தப்பட்ட ஒருவர் ஆன்மீக பாதையில் மாறினார். இப்படியெல்லாம் ஏன் நடக்குது?
அவங்களுக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையே என்ற நிராகரிப்பு இருந்திருக்கலாம். சில வேளைகளில் எனக்கு இப்படி தோன்றுவது உண்டு. நான் பிரம்ம குமாரியாக விரும்புறேன்னு கூட சொல்லியிருக்கேன். காரணம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் நான் பார்த்தாச்சு. என்றாலும் திரும்பிப்பார்க்கும்போது ஒன்றும் இல்லை.
ஒரே வருடத்தில் நான் சூப்பர் ஸ்டாரானேன். அப்புறம் ஒண்ணுமே இல்லாதவள் ஆளேன். பணத்துக்கும் ஒரு குறைவும் இல்லை. அப்புறம் அந்த பணமும் எனக்கு இல்லாமல் போனது. பணம் ரொம்ப இருக்குங்கிறதுக்காக அதை சாப்பிட முடியுமா? ஒரு லட்சம் ரூபாய் கையில் இருக்குங்கிறதுக்காக 10 பிரியாணி சாப்பிட முடியுமா? ஒரு பிரியாணிதானே சாப்பிட முடியும்.
அதுபோலவே அன்பும். உங்களின் அன்பைப்பெற்றவர்கள் திரும்பத்திரும்ப உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால்..? நான் இப்பவும் என் மீது உண்மையான அன்பைச்செலுத்துபவரை தேடிக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்பு யாரிடமிருந்தும் கிடைக்கலைன்னா “என்னடா வாழ்க்கை”ன்னு மனசுல தோணும்தானே?
அப்புறம் குடும்பத்தவர்கள். அவர்களும் என்னை ஏமாத்தினாங்க. ஷகீலா என்னோட உடன்பிறப்புன்னு சொல்லிக்க கூட அவங்க தயார் இல்லை. யாருமே இல்லாத ஒரு அவஸ்தை. நான் இந்த உலகத்துக்காக என்ன செய்திருக்கேன்? ஒண்ணுமே செய்யவில்லை. ஏதாவது செய்திருக்கலாம்..வேலை செய்யுறது.. சும்மா இருக்குறது.. சாப்பிடுறது… வேற என்ன நடக்குது? சிந்தித்துப்பார்த்தால் எனது வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை.
சொல்லப்போனால் நான் “ஒன்றுமே இல்லாதவள்” என்றே தோன்றுகிறது. அப்பத்தான் சன்னியாசி யாகலாமாங்கிற எண்ணம் வருது. இல்லாம கடவுளே நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுக்கப்பான்னு சொல்றதுக்கு இல்லை சன்னியாசியாகுறது..
எங்களை மாதிரி கிளாமராக திரையில் தோன்றிய நடிகைகளின் மனதில் தோன்றும்…. எல்லாத்தை யும் காட்டியாச்சே எங்களை யாரு கல்யாணம் செய்வாங்கன்னு… யாராவது காதலிப்பாங்க ளான்னெல்லாம் தோன்றும். ஆனால் இதயத்தில் இருப்பதை மத்தவங்களால பார்க்க முடியுமா? என்ன செய்வது? அதற்கு முதலில் என்னோடு நெருங்கிப்பேசிப்பழகினால் அல்லவா என்னைப் பற்றியும் எனது மனதில் உள்ளதையும் அறிய முடியும்..
இதனாலதான் நான் கடவுளோடு அதிகமாக நெருக்கமாக பேசுகிறேன். நான் தனி மனுஷி அல்ல..தெய்வத்தின் கூடவே நான் இருக்கிறேன். தெய்வம் என் கூடவே இருக்காரு. கடவுளைத்தவிர எனக்கு வேற யார் இருக்காங்க?
இப்போ தங்கம் என்ற பையனை தத்தெடுத்ததாகா கேள்விப்பட்டேன்..?
தங்கம் என் கூடத்தான் இருக்கான். என் கிட்டே அவன் வர்றப்ப ஆண்களைப்போலத்தான் இருந்தான். ஆனா தொடர்ந்து அவனை கவனிச்சப்ப நடை உடை பாவனை எல்லாம் பெண்க ளைப்போலவே இருந்தான். நான் கேட்டேன்..உனக்கு பெண்களைப்போல இருக்க விருப்பமான்னு கேட்டேன்..ஆமான்னு தலை குலுக்கினான்.
என் கிட்டே நீ நிற்குற காலம் முழுக்க நீ பெண் மாதிரியே நடந்துக்க..பெண் போல பீலிங் இருந்துச்சுன்னா அதே மாதிரி நடந்துக்க என்றேன். அப்புறம் சுரிதார் போட்டான். இப்ப பாருங்க அவனைப்பார்த்தா பெண் போலவே இருப்பான். சொல்லப்போனா திருநங்கையாகிட்டான்.
இதே வேஷத்தில் தெருவில் இறங்கினால் ஒருவேளை செக்ஸ் ஒர்க்கராக வேண்டிய நிலை வரலாம். இல்லைன்னா பிச்சை எடுக்க வேண்டிவரும்னேன்…அதற்கு அவன் சொன்னான்..”மம்மி நான் உங்க கூடவே இருந்துக்கிறேன்”னு. இப்போ அவன் என் மகனைப்போல என்கூடவே இருக்கிறான்.
இப்போ நான் வாழ்க்கையில் கொஞ்சமாவது பிடிப்போட இருக்கேன்னா காரணம் தங்கம்தான். அவன் என்னை நம்புறான். நான் அவனை நம்புறேன். ஆனா அந்த ஒரு காரணத்துகாகா மட்டுமே யாருக்காவது வாழ்ந்துட முடியுமா? கணவர், குழந்தை குட்டிங்களோட குடும்பமா இருந்தாதான் வாழ்க்கை….?
ஏக்கத்துடன் விடைகொடுத்தா ஷகீலா.
– க்ருஷ்ணவேணி தினேஷ்
Also Read