லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் மொபைல் போன் நம்பர்கள் விற்பனை செய்து வரப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மொபைல் போன் ரீசார்ஜ் செய்யப்படும் கடைகளில் இந்த விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
இந்த எண்களை வாங்கும் வாலிபர்கள் இளம்பெண்களுக்கு போன் மூலம் தொல்லை கொடுத்து வருவதும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற மோசடி குறித்து புகார் செய்ய 1090 என்ற ஹெல்ப்லைன் எண்ணை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்த எண்ணுக்கு கடந்த 4 வருடங்களில் 6 லட்சம் பேர் புகார் கொடுத்துள்ளனர். இதில் 90 சதவிகித புகார்கள் போனில் தொல்லை கொடுப்பது பற்றியது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது,
போன் மூலம் தொல்லைகளுக்கு ஆளாகும் இளம்பெண்களின் மோபைல் எண்கள் அனைத்தும் மொபைல் ரீசார்ஜ் கடைகளில் காசு கொடுத்து வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது இளம்பெண்களின் நம்பர்கள் அனைத்தும் மொபைல் ரீசார்ஜ் கடை களில் இருந்து வாங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த எண்களை பெரும்பாலான ரீசார்ஜ் கடைகள் விற்று வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்யப்போகும் இளம்பெண்களின் போன் நம்பர்கள் அங்குள்ள நோட்டில் எழுதுவது வழக்கம். மேலும் புதிய எண்கள் வேண்டி விண்ணப்பிப்பதும் உண்டு. அவ்வாறு விண்ணப்பிக்கும்போதுழ தங்களது படங்கள் விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்படும்.
இதுபோன்ற பெண்களின் படம் மற்றும் பெண்களின் மொபைல் எண்களை சபல புத்தி உள்ள ஆண்களுக்கு, போன் ரீசார்ஜ் கடைக்காரர்கள், பெண்களின் அழகுக்கு தகுந்தவாறு விலைபேசி விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட எண்களை வாங்குபவர்கள், அந்த பெண்களின் நம்பருக்கு போன் செய்து, முதலில் “உங்களிடம் நண்பனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறி தனது மோசடியை ஆரம்பிக்கின்றனர்.
சாதாரண பெண்ணின் நம்பர் ரூ.50-ல் ஆரம்பமாகி அழகான பெண்களின் நம்பர்கள் ரூ.500 வரை விலை பேசி விற்கப்பட்டு வருகிறது. இந்த தொழில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த 1090 ஹெல்ப் லைன் அமைக்க காரணமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நவ்நீத் சேகரா கூறும்போது, ஒரு நாளைக்கு குறைந்தது 100 புகார்கள் இந்த ஹெல்ப் லைனுக்கு வருகிறது. இதுபோன்ற மோசடி புகார்கள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.
போன் மூலம் பெண்களை சீண்டி வருகிறார்கள். ரீசார்ஜ் கடை வைத்திருப்பவர்களும் போலி சிம் வாங்க உதவி வருகிறார்கள். பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் பல தரப்பட்டவர்களாக இருக்கின்றனர். கிராமப்புற, நகர்ப்புற வேலை அல்லது வேலையில்லாமல் இருப்பவர்கள் இந்த அநாகரிகமான வேலையில் ஈடுபடுகின்றனர்.
இதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். குறைந்தது 7 வருட தண்டனையாவது கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
பெண்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக நாம் அடையும் நன்மை ஒருபுறம் இருக்க,
இதுபோன்ற கயவர்களின் செயலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் எச்சரிக்கை யாக இருப்பதே சிறந்தது….
உங்களின் மொபைல் எண்களை கடைகளில் ரீசார்ஜ் செய்வதை தவிருங்கள்…. நீங்களே ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்…
அதுபோல, புதிய சிம் வேண்டுமென்றால், அதற்கான கம்பெனி கடைகளுக்கு சென்று வாங்குங்கள்… சிறிய கடைக்காரர்களிடமோ.. ரோட்டில் விற்பனை செய்பவர்களிடமோ வாங்குவதை தவிருங்கள்…. எச்சரிகை… எச்சரிக்கை