சாதாரணமாக கேள்வி எழுந்தால் பரவாயில்லை… தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காக என்று கூறி, கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி. ஏறக்குறைய ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில நாட்களில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு ரிசர்வ் வங்கியால், புதிய கவர்னர் உர்ஜிட் படேல்கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.
இந்த புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் எப்போது அச்சடிக்கப்பட்டது?, எவ்வளவு அச்சடிக்கப்பட்டது? என பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச் செய்து கேள்வி கேட்டனர்.
இதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே, “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாவதற்கு 6 மாதங்களுக்கு முன் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் அச்சடிக்கப்பட்டது” என்று ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பதில் அளித்தார்.
ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக ஜூலை 19ம் தேதி நியமிக்கப்பட்டு, செப்டம்பர் 6-ம் தேதிதான் உர்ஜித் படேல் பொறுப்பு ஏற்றார்.
ஆனால் அவர் பொறுப்பேற்கும் முன் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் என்று அவரது கையெழுத்து இருக்கிறது.
கவர்னராக ஒருவர் பதவில் இல்லாத போது, அவர் கையொப்பம் இட்ட ரூ. 2ஆயிரம் நோட்டு எப்படி செல்லுபடியாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்று ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆகவே தற்போது ரிசர்வ் வங்கியும் இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
தவிர ரிசர்வ் வங்கி கவர்னராக இல்லாத ஒருவர் கையெழுத்திட்டுள்ளதால், 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்.