தேனி,

பயிர் கருகியதை கண்ட விவசாயி பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.  தண்ணீர் இல்லாமல்  பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மரணம் செய்து கொள்வது தொடர்கதையாக மாறிவிட்டது.

தமிழகம் முழுவதும் நீரின்றி பயிர்கள் கருகுவதை காணும் விவசாயிகள் அதிர்ச்சியில் மரண மடைந்து வருகின்றனர்.  இயற்கையாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யாததாலும், அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுப்பதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர்.

விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள்  உயிரி ழந்துள்ளனர். தமிழக வறட்சிக்கு விவசாயிகள் பலியாவது தொடர்ந்து வருகிறது.

இன்று, தேனியில் விவசாயம் பொய்த்துப் போனதை கண்டு விரக்தியடைந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.  தேனி அருகில் எருமலைநாயக்கன்பட்டியில் வசித்து வந்த விவசாயி மங்கலஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான இவர் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்திருந்தார். நீரின்றி பயிர்கள் கருகியதால் வாங்கியக் கடனைக் கூட கட்ட முடியாமல் போய்விட்டதே என்ற மனக் கவலையில் வயலில் தெளிக்க வாங்கி வைத்திருந்த மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.