ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மெகபூபா அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 குறித்து தனது நிலைபாட்டை கூற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் பா.ஜ. மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி உள்ளார். இன்று சட்டமன்ற கூட்டம் நடந்தது.
அப்போது மெகபூபா, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின.
எதிர்க்கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவை தலைவர் கவிந்தர் குப்தா அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான ம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் லால்சிங்கை எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அடிக்க பாய்ந்தனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்ட எதிர்கட்சியினர் பேரவை தலைவரின் மைக்கை உடைத்தனர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீது நாற்காலிகளை வீசினர். காகிதங்களை கிழித்து வீசினர். இதனால், சட்டமனறத்தில் கடும் அமளி உருவானது.