டெல்லி:

கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ‘வாக்காளர் பணம் வாங்கி கொள்ளுங்கள்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

கோவா மாநில சட்டசபைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பா.ஜ ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அங்குள்ள சிம்பெல் நகரில் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், ‘‘கட்சிகளின் ஊர்வலத்தில் பங்கேற்க பணம் வாங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஓட்டு போட பணம் கொடுத்தால், அதை வாங்கிக் கொண்டு தாமரைக்கு ஓட்டு போட வேண்டும்’’ என்று பேசினார்.

இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மனோகர் பாரிக்கருக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 3ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் அங்கு பிரச்சாரம் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘பணம் வாங்கிக் கொண்டு ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு’’ கூறியிருந்தார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த கெஜ்ரிவால், ‘‘லஞ்சம் பெறுவதற்கு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசவில்லை. பிற கட்சியிலிருந்து பணம் பெற்றுக் கொண்டாலும் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன்’’ என பேசியதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.