டி.வி.எஸ். சோமு பக்கம்:

“லெஃப்ட்ல கையை போட்டு, ரைட்ல இன்டிகேட்டரை போட்டு ஸ்ட்ரைட்டா போயிட்டே இருப்பான்டா…!” என்று நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் பற்றி ஒரு படத்தில் காமெடியாக சொல்லப்படுவது உண்டு.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையும் அப்படித்தான். ( சொல்லப்போனால் எல்லா நாடுகளின் நடவடிக்கையும் இப்படித்தான்.) ராஜதந்திரம்..!

ஆட்டோவுக்கும், அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு?

அடுத்த மாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த  விளையாட்டு வீரர்கள் இருவர் பங்கேற்க உள்ளனர். இவர்கள், தங்களது அமெரிக்கப் பயணத்திற்காக டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால், இருவரின் விசா விண்ணப்பங்களையும்  நிராகரித்துள்ளது அமெரிக்க தூதரகம்.  ஏன் என்று விளக்கம் கேட்டதற்கு,  “அமெரிக்காவின் தற்போதைய கொள்கைப்படி விசா மறுக்கப்பட்டுள்ளது”  என்றும் தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் இந்த விளக்கம்தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால், “அமெரிக்காவின் தற்போதைய கொள்கைப்படி” என்பது என்ன?

ஈரான்,ஈராக், சிரியா,சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய 7 இசுலாமிய நாட்டினருக்கு அமெரிக்கா வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.  இதுதானே அமெரிக்காவின் தற்போதைய கொள்கை. (விசா விவகாரத்தைப் பொறுத்தவரை.)

விசா மறுக்கப்பட்ட “ஜ[ம்மு – காஷ்மீர்” விளையாட்டு வீரர்
இந்த நிலையில் இதையே காரணம் காட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விசா மறுத்தால் என்ன அர்த்தம்?

மேலும்,

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த பகுதியை “சுதந்திர காஷ்மீர்” என்று அந்நாடு சொல்லிவருகிறது. இப்பகுதியை இந்திய தரப்பு, “ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்” என்று கூறுகிறது.

இந்தியா உரிமை கொண்டாடும் காஷ்மீர் பகுதிகளில் சில சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த இரு பகுதிகளின் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு பல வருடங்களுக்கு  முன்பே சாலை அமைத்தது சீனா.  இதை அப்போதே இந்திய அரசு கண்டித்தது. ஆனால் சாலை அமைக்கப்பட்டு, கடினமான அந்த மலைச்சாலையில் போக்குவரத்தும் நடக்கிறது.

இது ஒரு புறம் இருக்க…  அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகள், இந்திய மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள (ஒட்டுமொத்த ஜம்மு – காஷ்மீர்) பகுதியை சர்ச்சைக்குள்ளான பிரதேசம் என்று குறிப்பிடுவது வழக்கமான ஒன்று.  தங்கள் நாட்டில் வெளியிடப்படும் உலக வரைபடங்களிலும், ஜம்மு – காஷ்மீர் பகுதியை தனித்து அடையாளப்படுத்தி “சர்ச்சைக்குள்ள பிரதேசம்” என்று குறிப்பிடுவதும் உண்டு. இதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதும் சடங்கு போல் நடக்கும்.

இந்த நிலையில்தான், காஷ்மீரைச் சேர்ந்த இருவருக்கு தனது “தற்போதைய கொள்கை” சுட்டிக்காட்டி விசா மறுத்துள்ளது அமெரிக்கா.

ஆகவேதான்  தடை செய்யப்பட்ட ஏழு “நாடுகளின்” வரிசையில் ஜம்மு காஷ்மீர் பகுதியையும் அமெரிக்கா சேர்த்திருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவது இயல்புதானே?

ஜம்மு – காஷ்மீர் என்பது, தனது ஆட்சி அதிகாரத்தில் உள்ள – பிரிக்கவே முடியாத – ஒரு பகுதி என்று தொடர்ந்து சொல்லி வருகிறது இந்திய அரசு. இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கை என்பது இந்திய இறையான்மையை அவமதிக்கும் செயலாகவே  பார்க்கப்படும்.

ம்மு – காஷ்மீர்

இந்த நிலையில் இன்னொரு விசயம் நினைவுக்கு வருகிறது.

விசா தரமாட்டோம்  என்று அமெரிக்கா சொல்கிறது என்றால், விசாவே வேண்டாம் வாருங்கள் என்கிறது சீனா.

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தின் பெரும்பகுதியை, தனக்குச் சொந்தம் என்கிறது சீனா. இந்த மாநிலத்தின் வசிப்பவர்கள், சீனாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தால், “நீங்கள் இருப்பது சீன பகுதிதான். ஆகவே விசா தேவையில்லை” என்று பதில் அளித்து இந்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்குவது சீனாவின் வழக்கம்.

இல்லாவிட்டால், வழக்கமான விசா அளிக்காமல் இப்பகுதி மக்களுக்கு தனி விசா வழங்கும் பழக்கமும் சீனாவுக்கு உண்டு.

இதை இந்திய அரசு தொடர்ந்து கண்டித்து வந்தாலும், சீனாவின் போக்கில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இருவக்கு அமெரிக்கா விசா மறுத்திருப்பது முக்கியத்துவம் பெருகிறது.

அதிபராக பதவியேற்றவுடன்,  இந்திய பிரதமர் மோடிக்கு அலைபேசிய அதிபர் டிரம்ப், “அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுள் ஒன்று, இந்தியா” என்றார்.

இப்படி நட்பு பாராட்டும் அமெரிக்காவிடமிருந்து, இப்படியோர் நடவடிக்கையை இந்திய அரசு எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்திய அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

என்ன செய்யப்போகிறது இந்திய அரசு?