டெல்லி:
மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீது ‘‘மோசமான தாக்கத்தை’’ ஏற்படுத்திவிட்டது என்று மத்திய அரசேசு ஒப்புக்கொண்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு முதல் நாளான இன்று ‘‘பொருளாதாரக் கண்ணோட்டம்’’ என்ற அறிக்கையை மத்திய அரசின் பொருளாதார ஆலோசனை பிரிவு வெளியிட்டது. இதில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்திவிட்டது என தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் சிறப்பம்சங்கள்….
கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், ஊழலுக்கு எதிராகவும் பணமதிப்பிழப்பு அறிவிப்வை வெளியிட்டதாக மோடி தெரிவித்தார். ஆனால், ‘‘இந்த அறிவிப்பு பண பற்றாக்குறை ஏற்பட்டு தனி நபர்களையும், வர்த்தக நிறுவனங்களையும் வெகுவாக பாதித்தது. வரும் மார்ச் வரை இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும்’’ என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியான 7.6 சதவீதத்திலிருந்து குறைவானது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முந்தைய நிலையை அடிப்படையாகக் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை பதுக்கி இருப்போர் தான் ரூபாய் நோட்டு விவகாரத்தை விமர்சிப்பார்கள்.
வளர்ச்சி என்பது இதைவிட குறைவாக இருக்கும் என்று பலர் அச்சம் தெரிவிக்கின்றனர். நாளை மத்திய பட்ஜெட்டை அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதில், பொருளாதாரம், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விட்ட பிறகு மார்ச் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பும் என அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள எதிர்மறைத் தாக்கம் என்பது தற்காலிகமானது’’ என்று இந்த அறிக்கையை தயாரித்த மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறினார்.
‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்பு பொருட்களுக்கான தேவையை குறைத்து, நிலையற்ற தன்மையை அதிகரித்ததால் வளர்ச்சி மந்தமடைந்தது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
‘ஆனால், ஊழல் மற்றும் ரொக்க பரிவர்த்தனை குறைந்ததால் இந்த திட்டம் நீண்ட கால தொலைநோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் அனுகூலமானதாக இருக்கும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்பு மூலம் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று இந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருப்பது திருப்தியளிக்கிறது’’ என ஐ.டி.பி.ஐ பெடரல் வங்கி தலைமை முதலீட்டு அலுவலர் அனீஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
‘‘இந்த விஷயத்தில் அரசு முதன் முறையாக இதை ஒப்புக்கொண்டுள்ளது. – இதற்கு முன்பு இதை மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.