லக்னோ,

நான் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எதிரானவன். எனவே இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் தெரிவித்து உள்ளார்.

உ.பி. சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், அகிலேஷ் யாதவும் கூட்டாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து இருவரும் லக்னோ நகரின் தெருக்களில் கூட்டாக பிரச்சாரம் செய்தனர்.

ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியில் குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட குளறுபடிகளால் கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிருப்தியில் உள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் முலாயம் சிங் கலந்துகொள்ளலாமல் தவிர்த்து வந்தார்.

இதுகுறித்து நிருபர்கள்  முலாயமிடம் கேட்டதற்கு, சாமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்றும், “நான் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எதிரானவன் என்று அதிரடியாக கூறினார்.

மேலும், தற்போதுள்ள காங்.- சமாஜ்வாதி கூட்டணிக்கு ஆதரவாக எங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன்.  சமாஜ்வாடி கட்சிக்கு தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் சக்தி உள்ளது” என்றார்.

தற்போதுதான் சமாஜ்வாதி கட்சி உட்கட்சி பூசல் குறைந்து தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் வேளையில், முலாயமின் இந்த அதிரடி அறிவிப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும்,   மீண்டும் பிரச்சினையை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.