ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே, ஜல்லக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு மீதான தடை விலகிவிட்டது எனவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதோடு, ஜல்லிக்கட்டுக்கு புகழ் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டை தானே துவக்கி வைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை அலங்காநல்லூரில், மாநில அரசு நிர்வாகமும் காவல்துறையும் செய்ய முற்பட்டன. ஆனால் போராட்டக்காரர்கள், “நிரந்தர தீர்வு வேண்டும்”என்று கோரி அங்கு தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.
ஆகவே மதுரை சென்ற முதல்வர் பன்னீர் செல்வம், அலங்காநல்லூர் செல்வதை தவிர்த்தார். பிறகு நத்தத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை அவர் துவக்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டது. அங்கும் போராட்டம் தீவிரமாக நடைபெறுவதால் அந்த பயணத்தையும் அவர் தவிர்த்து சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் மானோஜிப்பட்டியில் நடைபெற இருப்பதாக அறிவித்த ஜல்லிக்கட்டை ரத்து செய்வதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதே போல நத்தத்தில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதே போல வேறு பல மாவட்டங்களிலும் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் தடைபோட்டதை அடுத்து மாநிலம் முழுதும் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு வாய்வழி உத்தரவு மூலம் ரத்து செய்ய வலியுறுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.