சென்னை,
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது. தமிழக தலைநகர் சென்னை வரலாறு காணாத அளவில் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.
தமிழக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக இளைஞர்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இரவு பகல் பாராது இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதையொட்டி சென்னை மெரினாவை நோக்கி சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலை முதலே சென்னையை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு குவிய தொடங்கி யுள்ளதால் சென்னை கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை முதலே பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், 4 சக்கர வாகனங்களிலும் கருப்பு சட்டை அணிந்து கூட்டம் கூட்டமாக சென்னையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
பல இடங்களில் இருந்து மெரினாவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் மெரினாவை நோக்கி வருவதால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் அதிகமான வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலால் ஏராளமான இளைஞர்கள் பல கி.மீட்டர் தூரம் நடந்தே மெரினா வருகிறார்கள்.
இன்று சென்னை மாநகர் முழுவதும் ஆங்காங்கே ஆட்டோ ஓட்டுநர்கள், குடியிருப்பு சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே பொதுமக்களை திரட்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் செய்து வருகின்றனர்.