சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 4வது நாளாக தமிழக மக்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவு காரணமாக டில்லி தலைவர்கள் மிரண்டுபோய் உள்ளனர்.

தமிழர்களின் எழுச்சி காரணமாக தமிழகத்தை சேர்ந்த பாரதியஜனதா தலைவர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என மிரண்டு போய் உள்ளனர்.

இதன் காரணமாகவே, தமிழக முதல்வர் மூலம் மாநில அரசே அவசர சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல்பெற ஆவன செய்வதாகவும் மத்திய அரசு கூறி யுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பின் வழக்கு  காரணமாக உச்சநீதி மன்றம்  தடை விதித்துள்ளது. இந்த ஆண்டுடன் சேர்த்து  3 ஆண்டு களாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடம் எப்படியும் நடத்த வேண்டும் என்றும் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக முடிவுஎடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்  குரல் கொடுத்து வருகின்றனர்.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் இரவு பகல் பாராது  தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.

அலங்காநல்லூரில் இன்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அந்த பகுதி மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால்,  காலை முதலே மாணவர்கள் மெரினாவை நோக்கி படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 

கோவை வா.உ.சி மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை தமுக்கம் மைதானத்திலும் கடந்த 4 நாட்களாக இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இளைஞர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் சூடுபிடித்து உள்ளது.

போராட்டத்திற்கு ஆதரவாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால்,90 சதவிகித அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

மாநிலம முழுவதும் லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

வணிகர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழர்களின் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது….