ஜல்லி்க்கட்டு தடையை நீக்கக்கோரி, சேலம் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மாணவன் ரயில் மீது ஏறியபோது, உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தொடர்ந்து நான்காவது நாளாக   தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் பொதுவாக மிகக் கட்டுப்பாடோடு நடந்துவருகிறது. ஆனால் ஒரு சிலர், ஆர்வக்கோளாறுத்தனமாக நடந்துகொள்வதும் நடக்கிறது. தரக்குறைவாக முழக்கம் எழுப்புவது, செய்தியாளர்களிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்வது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் அடக்குவதும் நடக்கிறது.

இன்று சேலம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஓரு சிலர், ரயில் மீது ஏறினர்.  அவர்களை பிறர் தடுத்தனர். ஆனாலும் அந்த சில மாணவர்கள், ரயில் கூரை மீது ஏறி நின்று முழக்கமிட்டனர். அப்போது அவர்களில் ஒருவர் மீது உயர் மின் அழுத்த கம்பி படவே, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இளைஞர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“தமிழர்களின் உணர்வை மதிக்காத மத்திய மாநில அரசுகளை எதிர்த்து எந்தப் பின்னணியும் இன்றி தன்னெழுச்சியாக மாணவர்கள் போராடிவருகிறார்கள். கட்டுப்பாட்டுடன், சிறப்பான முறையில் போராட்டம் நடந்துவருகிறது. ஆனால் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகள் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும்” என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களும், இளைஞர்களும்.