சென்னை:

டாடா குழுமத்தின் தலைவராக நாமக்கல் மோகனூரை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாட ஓய்வுபெற்றார். இவருக்கு பதிலாக சைரஸ் மிஸ்திரி தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் இவரை பதவி நீக்கம் செய்து ரத்தன் டாடா உத்தரவிட்டார். இவரது பதவி நீக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் என்ற நிறுவனத்தின் சிஇஓ.வாக இருக்கும் நடராஜன் சந்திரசேகரன் தற்போது ஒட்டுமொத்த டாடா குழும தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை தலைவராக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். டாடா குடும்பத்தை சாராத ஒரு நபர் முதன்முறையாக அக்குழுமத்தின் தலைவராக நியமனம் செய்யப்ப்டடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் தான் நடராஜன் சந்திரசேகரின் சொந்த ஊர். இவர் 1987ம் ஆண்டு திருச்சி என்ஐடியில் (அப்போது ஆர்இசி) கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலை பட்டம் பெற்றவர். கோவை சிஐடி.யில் அப்ளைடு சயின்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றார்.

1987ம் ஆண்டு டிசிஎஸ்.ல் பணியில் சேர்ந்தார். சிஓஓ மற்றும் செயல் இயக்குனர் பதவிகளை வகித்தார். 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி அந்த நிறுவனத்தின் சிஇஓ.வாக நியமனம் செய்யப்பட்டார். இளம் வயது சிஇஓ என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இவர் தற்போது டாடா குழும தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.