சென்னை,
ல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடையை நீக்க கோரியும் சென்னையில்  மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் பேசியதாவது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில் மாநில அரசையும் கேட்டுக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு கட்சிகளின் சார்பிலும், பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தக் கூடிய அமைப்புகள் சார்பிலும் போராட்டம் நடக்கிறது.

இதுவரையிலும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு இருந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மத்தியில் இணை மந்திரியாக இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணனும், அதேபோல தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கக்கூடிய தமிழிசை சவுந்தரராஜனும் நிச்சயமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், உறுதியாக நடைபெறும் என்று தொடர்ந்து, ஏறக்குறைய சென்ற ஆண்டிலிருந்து இந்த நிமிடம் வரையில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க முடியாத நிலை தான் இருந்து வருகிறது.

கடந்த 10, 15 நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை பேரணியாக, சாலை மறியலாக, ஆர்ப்பாட்டங்களாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் காட்சிகளை பார்க்கின்ற போது, எனக்கு நினைவுக்கு வருவது, நமது தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில், 1965-ம் ஆண்டும் நம்முடைய மொழியை காப்பாற்றுவதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று, அந்தப் போராட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றது என்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகி இருக்கின்றது.

இப்போது மாணவர்கள் இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு, அதற்குரிய அனுமதியை தர வேண்டும் என்று போராடும் காட்சியை பார்க்கின்றபோது, உள்ள படியே மகிழ்ச்சி யடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

அதேநேரத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்காக எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே, புதுக்கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், என்னுடைய பாராட்டையும், நன்றியையும், எனது ஆதரவையும் தெரிவிப்பதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்ள வலியுறுத்த விரும்புவது, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரத்தில் தனியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், மாணவர்களுடைய போராட்டம், மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும்.

அப்படி மாணவர்களின் போராட்டம் வெடித்தால், நிச்சயமாக நான் கூறுகிறேன், இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், அவர்களுடைய வீழ்ச்சியாகத்தான் இது அமைந்திட முடியும் என்று எச்சரிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.
கேள்வி:- தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என சில கட்சிகள் தெரிவித்து இருக்கின் றன.  ஒரு வேளை அனுமதி வழங்கப்படவில்லை என்றால் தி.மு.க. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துமா?

பதில்: இன்றைக்கு மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கக் கூடிய காட்சிகளை பார்க்கின்ற போது, நிச்சயமாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

இல்லையென்றால், தலைவர் கலைஞரிடமும், பொதுச்செயலாளரிடனும் கலந்து பேசி, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதா? அல்லது தி.மு.க.வின் சார்பில் நடத்துவதா? என்பதை அறிவிப்போம்.

கேள்வி:- ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்கும் என்று சொல்லும் மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன், போகியன்று திராவிட இயக்கங்களை அழித்து விட்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று சொல்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- திராவிட இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

இவ்வாறு  ஸ்டாலின் கூறினார்.