நெல்லை,

ஆணவக்கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நெல்லை நீதி மன்றம்.

ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால், காதலன் சகோதரியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கணவன், மனைவி இரண்டு பேருக்கும் தூக்குதண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளளது.

ஆணவக்கொலை வழக்கில் தமிழகத்தில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.

நெல்லை  வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ரெயில்வே ஊழியர் விஸ்வநாதனும்,  நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன்  என்பவரின் மகள் காவேரியும் காதலித்து வந்தனர்.

அவர்கள் இருவரும் ஜாதி மாறி காதலித்ததால், அவர்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் கொடுக்க வில்லை. இதையடுத்து, கடந்த  2016 மே மாதம் வெளியூரில் திருமணம் செய்து கொண்டனர்.

காவேரியை காணாது அவரது பெற்றோர், அவரது காதலன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது  வீட்டில் இருந்த விஸ்வநாதனின் கர்ப்பிணி அக்காள் கல்பனா, எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி உள்ளார்.

இதனால்  ஆத்திரமுற்ற சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும் கர்ப்பிணி என்றும் பாராது, கல்பனாவை வீட்டுக்குள் வைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர்.

காவேரியின் தந்தையான  சங்கரநாராயணன், தச்சநல்லூர், கிராம தலையாரியாக இருந்து வருகிறார். அவர்கள் வேறு ஜாதி, காவேரி காதலன் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

ஜாதி மாறி மகள் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், காதலனின் அக்காள் கல்பணாவை கொலை செய்துவிட்டனர். இது ஆணவக்கொலையாகும்.

பரபரப்பான இந்த சம்பவத்தை அடுத்து, கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில்  நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். கொலையாளிகளான சங்கரநாராயணன், மனைவி செல்லம்மாள்  ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

கொலை நடந்து 8 மாதத்திலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கோர்ட்டில் உள்ளோர் ஆச்சரியம் அடைந்தனர். இதுபோல் ஒவ்வொரு வழக்கும் விரைவாக விசாரித்து முடிவு செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறினர்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள ஆணவக் கொலைகளில், முதன் முதலாக தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.