சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்யவந்த சசிகலாபுஷ்பா கணவர் மற்றும் அவரது வக்கீல்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது.
சசிகலா ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுக்றது.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று பொதுச்செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய வந்த, பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் வக்கீலுக்கு அடி, உதை விழுந்தது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், அதிமுகவை சேர்ந்த எம்.பி. சசிகலாபுஷ்பாவும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
புதிய அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை பொதுச் செயலாளராக போட்டியில்லமல் தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், சசிகலா உறுப்பினராகி 5 ஆண்டுகள் நிறைவு பெறவில்லை. அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று சசிகலாபுஷ்பா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன் என்று ஏற்கனவே சசிகலாபுஷ்பா அறிவித்திருந்தார்.
இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொண்டர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்லி வந்தனர்.
இந்த நிலையில், இன்று சசிகலாபுஷ்பா மனு தாக்கல் செய்ய வருவதை அறிந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அதிமுக தலைமை அலுவலகத்தில் காலையில் அவர்களுக்கு ஆதரவான தொண்டர்கள் கூட்டடத்தை கூட்டினர்.
இந்த தகவல் காவல்துறையினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறை இணை ஆணையர் மனோகரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அங்குவந்த சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமையகம் வந்து சேர்ந்தனர்.
அவர்களை கண்டதும், அதிமுக தொண்டர்கள் ,ஒருசிலர் ஆவேசமடைந்து தாக்க தொடங்கினர். ஒரு சில போலீசாரா அப்போது அங்கே இருந்ததால், அவர்களால் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
போலீஸ் வளையத்தையும் மீறி லிங்கேஸ்வர் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் சசிகலா புஷ்பா கணவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த வக்கீலும், அவர்களுடன் வந்த சிலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதிமுக தொண்டர்கள் அல்ல என்றும், சசிகலாவால் வரவழைக்கப்பட்ட ரவுடிகள் என்றும் அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் கூறினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.
சசிகலாபுஷ்பா கணவர் தாக்கப்படும்வரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போலீசார் நிலமை விபரீதமாக போவதை உணர்ந்தபிறகே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.