பனாஜி,
கோவா விமான நிலையத்தில் விமானம் ரன்வேயில் ஓடியபோது தீடீர் விபத்து ஏற்பட்டது. இதில் 15 பயணிகள் காயமடைந்தனர்.
கோவா விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி அருகிலுள்ள பகுதியில் இறங்கியதால் அதனுள் இருந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
கோவா மாநிலம் டபோலிம் விமான நிலையத்திலிருந்து மும்பை செல்வதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 161 பயணிகளுடனும், 7 சிப்பந்திகளுடனும் இன்று அதிகாலை கிளம்பியது.
ஓடு தளத்தில் ஓடத் தொடங்கிய போது திடீரென குலுங்கிய விமானம், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஓடு பாதையில் இருந்து விலகி ஓடியது. உடனே சுதாரித்துக் கொண்ட விமானிகள் விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினர்.
இதன் காரணமாக விமானத்தினுள் இருந்த பயணிகள் சிலருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர் உடடினயாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
விமானிகளின் சாதுர்யம் காரணமாக பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.