சென்னை,
நாட்டில் தற்போது எழுந்துள்ள ரூபாய் நோட்டு பிரச்சினை ஆறு மாதங்கள் ஆனாலும் தீராது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் 8ந்தேதி  கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பணப் புழக்கம் குறைந்து போனதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இன்றுவரை பொதுமக்கள் வங்கி வாசல்களில் தவமிருந்து பணம் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,
சென்னை, காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் மாலை 06:00 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ‘பணமதிப்பு இழப்பு (DEMONETIZATION) – பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று ப.சிதம்பரம் பேசினார்.
அவர் பேசியதாவது,
நாட்டில் எழுந்துள்ள ரூபாய் நோட்டு  பிரச்சனை 6 மாதங்கள் ஆனாலும் தீராது என அதிரடியாக தெரிவித்தார், மேலும்  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்  மூலம் கருப்புப் பணம் அதிகரித்துள்ள தாக சொல்லும் மோடி, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது கேலிக்குரியது என்றார்.
புதிய 2000 ரூபாய் நோட்டுக்களால் கருப்புப் பணம் அதிகரிக்குமே தவிர குறையாது என்றும்  தெரிவித்தார். முறையான விதி முறைகளை பின்பற்றாமல் பொது மக்களை மோடி அரசு வாட்டி வதைத்து வருவதாக குற்றம் சாட்டிய ப.சிதம்பரம், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் தோல்வி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமராக இந்திராகாந்தி பதவி வகித்தபோது நாட்டில் எமர்ஜன்சி அறிவித்தார்.
எமர்ஜென்சி அறிவித்தது தவறு என்று திரும்ப பெற்ற அன்னை இந்திரா காந்தி இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் ,
மோடியோ பணமதிப்பிழப்பு செய்தது தவறு என்று தெரிந்தும் , மக்கள் ஏற்கவில்லை என்று புரிந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்
இவ்வாறு அவர் பேசினார்.