டெல்லி:
கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்கு அந்தோணியர் கோயில் உள்ளது.

தற்போது கச்சத் தீவில் புனரமைக்கப்பட்டுள்ள அந்தோணியார் தேவாலய திறப்பு விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 பக்தர்கள் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று ராமேஸ்வரம் வேர்கோடு புனித ஜோசப் ஆலய பங்குதந்தை சகாயராஜ் தமிழக அரசுக்கு மனு அனுப்பி இருந்தார்.
அதைத்தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயிலின் புதிய கட்டிடத்தை புனிதப்படுத்தும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வதற்கு இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுத்தரக் கோரியிருந்தார்.
ஆனால், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெறும் இந்தத் திறப்பு விழா சிறிய விழாதான். எனவே தமிழக மீனவர்கள் இதில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்தத் தேவாலயத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel