டில்லி:
பிரதமர் மோடி தன்னுடைய இமேஜ் உயர வேண்டும் என்பதற்காக கவர்ச்சி அரசியல் செய்து வருகிறார் என்று கடுமையாக தாக்கி பேசினார் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி.
காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்ட பார்லிமென்டரி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் சோனியா கலந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக துணைத்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தனது இமேஜை சிறை வைத்த நிலையில் டிஆர்பி ரேட்டுக்காக ஏதேதோ செய்து வருகிறார். இதுவரை இந்நாட்டுக்கு அளித்த காங்கிரஸ் பிரதமர்களில் ஒருவர்கூட டிஆர்பி-க்காக பணியாற்றிய தில்லை. ஆனால், பிரதமர் மோடியோ அவரது சுய அடையாள பிம்பத்திலே சிறைபட்டுக்கிடக்கிறார்.
கவர்ச்சி அரசியல் செய்வதையே பிரதமர் விரும்புகிறார். கவர்ச்சி அரசியலை தனது கொள்கையாக வைத்து பிரதமர் செயல்படுவதை காங்கிரஸ் அனுமதிக்காது.
பாகிஸ்தான் தொடர்பான கொள்கையில், அரசு குழப்பத்தில் உள்ளது. பாகிஸ்தானுடனான மத்திய அரசின் அணுகுமுறை முழுத் தோல்வி அடைந்து உள்ளது. அது பாகிஸ்தானுடனான உறவை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது என்றார்.
மேலும், கருப்புப் பணத்துக்கும், ரொக்கப் பணத்துக்கும் இடையேயான வேறுபாட்டை மோடி புரிந்து கொள்ள வில்லை. நாட்டில் இருக்கும் அத்தனை ரொக்கப் பணமும் கருப்புப் பணம் இல்லை.
அதேவேளையில் எல்லா கருப்புப் பணமும் ரொக்கப் பணமாக இருப்பதில்லை. இந்த வேறுபாடு புரியாமல் இந்தியாவையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.