டில்லி,
ரூபாய் நோட்டு செல்லாது மற்றும் சில்லரை பிரச்சினையால் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சம் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
கடந்த 8ந்தேதி இரவு மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இதன் காரணமாக பெரும்பாலானோர் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது ஒருபுறம் இருக்க, உலகின் மிகச்சிறந்த போனான, ஆப்பிளின் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
பணம் செல்லாது என்ற பிரச்சினையால் உயர்வகுப்பினர் பலர் அவர்களுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். அந்த பட்டியலில் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனையும் இந்தியாவில் படுஜோராக நடைபெற்று வருகிறது.
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி அறவிக்கப்பட்ட பிறகு ஐபோன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வர்த்தக தகவல்கள் கூறுகிறது.
இதன் உச்சகட்டமாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் ஐபோன்7தான் அதிகமாக விற்பனை ஆவதாகவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
ஆப்பிளின் ஐபோன்கள் 60 ஆயிரம் தொடங்கி -92 ஆயிரம் ரூபாய் வரை இந்தியாவில் விற்பனையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.