இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினியின் வாழ்க்கை வரலாறு, இன்று புத்தகமாக வெளியாகிறது.
‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற பெயரிலான இப்புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து, யாழ் பதிப்பகம் என்ற தனது பதிப்பகத்தின் மூலமாக வெளியிடுகிறார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட பலர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள்.
ராஜிவ்கொலை குறித்து விசாரித்ததில் பல குளறுபடிகள் உள்ளதாக, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரகோத்தமன் என்ற காவல்துறை அதிகாரி பலமுறை கோடிட்டு காட்டியுள்ளார். ஆனால், மத்தியஅரசு ஜெயின் கமிஷன் அறிக்கை ஒன்றை வைத்தே விசாரணையை முடித்து, தீர்ப்பும் வாங்கிவிட்டது.
இதற்கிடையில் ராஜிவ் கொலை கைதியாக அறிவிக்கப்பட்டு, தற்போது வரை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினியை ராஜிவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து சந்தித்து சென்றார். இது பரபரப்பாக பேசப்பட்டது.
இன்று வெளியாகும் புத்தகத்தில் “என் விடுதலையும் பிரியங்கா சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி விவரித்துள்ளார்.
அதிலிருந்து சில பகுதிகள்:
“விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடுமையான கட்டுப்பாடு ஒன்று இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு 26 வயதும், பெண்களுக்கு 21 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அனுமதி இன்றி யாரும் திருமணம் செய்ய முடியாது. அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். பொதுவாக யாரும் அப்படி மீறுவது இல்லை என்பதே அங்குள்ள செய்திகள்.
அப்படி இருக்க, என் கணவர் எப்படி 21 வயதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருக்க முடியும்.? திருமணம் செய்துவிட்டு ஊருக்கு போவதற்காக வேதாரண்யம் கடற்கரையில் படகுக்காக ஏன் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்? இயக்கத்தினருக்கு அந்த வழக்கம் இல்லையே. ஆவணங்களில் எல்லாம் இதை மறைத்து விட்டார்கள்.
சம்பவத்திற்கு பிறகு சி.பி.ஐ. சிவராசனை வலை வீசித் தேடிக்கொண்டிருந்தது. அதனால் 7.6.91 அன்று மேலிட உத்தரவுப்படி சிவராசன் தனது மீதிப் பொறுப்புக்களை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு இலங்கை போவதாக சொல்லிப்போனார் என சி.பி.ஐயினர் என் கணவர் பெயரில் உள்ள வாக்குமூலத்தில் எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டிருக்கிறது மேடம்.
இயக்கமாக இருந்திருந்தால் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு புறப்பட்டிருக்க முடியாது. கணவரும் இக்கொலையில் சம்மந்தப்பட்டு இருந்தால் சிவராசன், சுபா, நேருவோடு சேர்த்து என் கணவரையும்தானே இலங்கைக்கு அழைத்திருக்க வேண்டும்.”
“என் கணவருக்கு மேலிடத்து உத்தரவு வர, இலங்கை புறப்பட்டு செல்ல வேதாரண்யம் சென்று ஒரு வாரம் காத்திருந்துவிட்டு, படகு வரவில்லை என 18ஆம் தேதி என்னைத் தேடி சென்னைக்கே வந்துவிட்டார் என்று சிபிஐயினர் கதை அளந்துள்ளனர், என்றபடி, ‘இங்கே ஒரு விஷயத்தை விளக்கமாகச் சொல்ல அனுமதிக்கனும் மேடம்’ என கேட்கிறேன். ‘ஆகட்டும் தொடருங்கள்’என சம்மதிக்கிறார் பிரியங்கா.
முருகன் புலிகள் இயக்கத்தின் முக்கிய நபரா?
அந்த காலகட்டத்தில் புலிகளின் நிறைய படகுகள் வேதாரண்யம் கடற்கரை பகுதிக்கு வந்து சென்றபடி இருந்தன என சி.பி.ஐயினரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். தினமும் நினைத்த நேரத்தில் தமிழகம் வந்தும் போகும் வசதி அவர்களிடம் இருந்தது என்றும் சொல்கின்றனர்.
என் கணவர், அதில் ஏறிப்போயிருக்கலாம் அல்லவா?
அடுத்து அவர்களுக்கு வயர்லெஸ் தொடர்பும் இருந்தது என்கிறார்கள். என் கணவரும் வயர் செய்திகளை அனுப்பிப் பெற்றுக் கொண்டார் என்கிறார்கள். கணவரை இரண்டாம் கட்ட தலைவர் என்கிறார்கள் தீர்ப்பில். அப்படி இருக்க அதன் மூலம் தொடர்புகொண்டு படகை வரவழைத்து சென்றிருக்கலாம் அல்லவா? சி.பி.ஐ. சித்தரித்தபடி ஒரு இரண்டாம் கட்ட தலைவர் ஒரு வாரம்வரை காத்திருந்துவிட்டு படகு வரவில்லை என்று திரும்பி வரவேண்டியது ஏன்?
வாக்கிடாக்கியில் ஒரு செய்தி சென்றால் படகுகள் வந்து அழைத்துச் சென்றிருக்குமல்லவா? ஏன் அப்படி நடக்கவில்லை? ஏனென்றால், அவர் சாதாரண நபர், உண்மையில் வேதாரண்யம் போயிருந்தால் மற்றவர்களைப்போல் தனியார் படகிற்கு காத்திருந்தார். அந்த படகு வரவில்லை என்றான பிறகுதான் திரும்பியிருப்பார். ஆனால் அதுவும் உண்மை அல்ல. அந்த சமயத்தில் தன் உறவினர்களுடன் தமிழக கோயில்களுக்கு சென்றிருந்ததுதான் உண்மை.”
நான் குற்றவாளியா ?
“என்னைப் பிரதான குற்றவாளி என்று கூறுகிறார்கள். ஆனால் நான் சம்பவம் நடந்த நாள் அன்றும் அதற்கு முன்பும் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. அந்த மே மாதத்தில் ஒரு நாள்கூட நான் அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததில்லை. சம்பவ தினமான மே 21ஆம் தேதியன்றுகூட வழக்கம் போலத்தான் அலுவலகத்திற்கு போனேன். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றேன். அவர்களோ, ‘எதற்கு அரை நாள் லீவு. சிறிது நேரம் வேலை பார்த்துவிட்டு கிளம்புங்கள்’ என்று கூறினார்கள்.
நான் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தேன். என்னிடம் எந்த பதட்டமும் இல்லை. அரை நாள் வேலை செய்துவிட்டு பிறகுதான் இராயப்பேட்டை வீட்டிற்கு போகிறேன். சாட்சி விசாரணைகள் எல்லாம் அதைத்தான் தெளிவு படுத்தியிருக்கின்றன. கொலைச் சதி தெரிந்த ஒருவர் இப்படியெல்லாமா நடந்துகொள்வார் என்று ஏன் யாரும் யோசிக்கவேயில்லை? இப்படியெல்லாம்கூட ஒருவர் கொலைச் சதி குழுவில் இருக்க முடியுமா?”
“தீர்ப்பிலும்கூட ஏராளமான தவறுகள் இருக்கின்றன மேடம்’ என்ற நான் சில முக்கிய உதாரணங்களை மட்டும் அவரிடம் எடுத்துக் கூறினேன். கேட்டுக்கொண்டிருந்தவரின் முகம் வாட்டமாகியது. குழப்பமடைந்தவராக காணப்பட்டார். அதை விரும்பாத நான் உதாரணங்களை நிறுத்திவிட்டு, அடுத்த சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலையினை எடுத்துச் சொல்லத் தொடங்கினேன்.
விசாரணையில் ’முரண்பாடுகள்’
கொலைச் சதி சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் பாரிமுனையில் இருந்து பேருந்தில் சென்றதாகதான் சி.பி.ஐ. கூறியது. சாட்சி ஆவணங்களும் அதைத்தான் சொல்கின்றன. அதோடு வெடிகுண்டை முதுகில் கட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். ஓடும் பேருந்தில் நின்றபடி பயணிக்கும் வெடிகுண்டு பெண்ணால் யார் மீதும் மோதிவிடாமல் நின்றுகொண்டே போக முடியுமா? அப்படியே உட்கார நினைத்தாலும் முதுகில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு உட்கார முடியுமா? வழியிலேயே வெடித்திருக்க வாய்ப்பில்லை என கூற முடியாதே. திட்டமிடுபவர்கள் அப்படியா திட்டமிடுவார்கள்? ஏன் இத்தனை முரண்பாடு?
இன்னொரு முக்கிய விடயம் மேடம்…. ஹரிபாபு எடுத்த கடைசி போட்டோவில் அந்த பொண்ணு தணு வலது தோள் முதுகுப் பக்கம் கை வைத்து யாரோ ஒருவர் உங்கள் தந்தையை நோக்கித் தள்ளுகிற காட்சி பதிவாகி இருக்கிறது. அந்த கை யாருக்கு உரியது என்று இதுவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்படவே இல்லை மேடம். இதற்கு பதிலும் இதுவரை சிபிஐ சொல்லவும் இல்லை.
சம்பவ இடத்தில் இறந்துபோன போட்டோகிராபர் ஹரிபாபுவின் நிலை மற்றும் லதா கண்ணன் , அவரது மகள் கோகிலா ஆகியோரது நிலைதான் என்னுடைய நிலையும். சதித் திட்டம் தெரிந்திருந்தால் ஹரிபாபு அருகில் இருந்து புகைப்படம் எடுத்திருக்க மாட்டார். கூடவே சுபா, தனு, சிவராசன், லதா கண்ணன் அவர் மகள் கோகிலா உள்ளிட்டவர்களையும் படம் எடுத்திருக்க மாட்டாரே. அதே நிலைதான் எனக்கும் என்று அதற்கான பல முக்கிய விஷங்களை மட்டும் கூறினேன்.
முகம் சிவந்த பிரியங்கா
மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்விகேட்டார். அப்போதுதான் எனக்கொரு மன உறுத்தல் இருந்தது. எங்கள் இருவரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோமே. கணவருடன் தூக்குமர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும், பேசவேண்டும். அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிட வேண்டும் என்று அவர்களைப் பற்றி பேசினேன்.
அப்போதுதான் அவர் முகம் மாறத்தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகமும் அதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்கு கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தினார். எதிர் கேள்வியால் மறுத்தபடி, “உன்னைப் பற்றி சொன்னாய்.. உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. ‘அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்…? அவர்களை பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்?’ என சற்று காட்டமாக கேட்டார். அப்படியான அதிருப்தியையும் எதிர்ப்பையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்தம்பித்தேன்
‘இல்லைங்க மேடம். அவர்களும் அப்பாவிகள்தான்…’ என நான் சொல்ல முற்பட்டபோதே, ‘இதோ பாருங்கள். நீங்கள் அனைவருமே நிரபராதிகளா? உங்களில் யாருக்குமே இந்த சம்பவத்தில் தொடர்பில்லையா? அப்படி என்றால் இந்த விசாரணை, சி.பி.ஐ. சாட்சிகள், ஆவணங்கள் எல்லாமும் பொய்யா? நீதிமன்ற முடிவுகள் தவறானதா? என்ன சொல்ல வருகிறீர்கள்’ என கோபத்தின் உச்சிக்கு போனபோது எனக்கு நடுநடுங்கத் தொடங்கிவிட்டது.
அதற்கு மேலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்தம்பித்து நின்றேன். சி.பி.ஐ. ஜோடிப்புகள், தீர்ப்புகள் எல்லாமே தவறுதான் என்பதை எப்படி அவருக்கு புரியவைப்பது? அப்படிச் சொன்னால் அவர் குடும்பம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சகிப்பது மிக சிரமமாச்சே என்று அப்படியே பிரமை பிடித்து பார்த்திருந்தேன். மேற்கொண்டு பேச எனக்கு நா குழறியது.
அவரின் ஆதங்கத்தை, அந்த எதிர்ப்பை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேசத்தின் மிகப்பெரிய தலைவர், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு, இவ்வளவு மோசமாகவா விசாரணை நடத்தப்பட்டது? உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே இல்லையா, நம்மை ஏமாற்றி விட்டார்களா? தந்தையின் மரணத்திற்கு ஒரு நீதி கிடைக்கவில்லை. கிடைத்ததாக சொல்லும் நீதியும் ஏமாற்றப்பட்டதா? என்ற கோணத்திலான வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம்.
அதைத்தான் என்மீது கோபமாக கொட்டுகிறார் என்பதை புரிந்து கொள்கிறேன். அவரது கோபக் கொந்தளிப்பு எனக்கு நடுக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. கோபத்தில் அவர் பேசிய தொனி அச்சுறுத்தலாக மாறியது. சில உண்மைகளை சொல்லும்போது அப்படி அவர் ஆகவில்லை என்றால்தான் நாம் சிந்தித்திருக்க வேண்டும். நான் சொன்னதை எல்லாம் உள்வாங்கி இருக்கிறார். எனவே இயற்கையாக எழக் கூடிய உணரச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எங்களின் சந்திப்பு தொடர்ந்து 75லிருந்து 85 நிமிடங்கள் வரை இருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக்கொண்டே சின்ன சின்ன கேள்விகளை எழுப்பியிருந்தார். முகத்தில் அதிருப்தியும், வெறுப்புமாக இருந்தது. சமயத்தில் ஆச்சரியம், வியப்பு ஆகியவையும் வெளிப்பட்டன.
அதன் பிறகு நான் மற்றவர்களைப் பற்றி பேசப்போய்தான் அவர் ஒரேடியாக அதிருப்தியை வெளிக்காட்டினார். தொடர்ந்து எதிர்ப்பு கேள்விகளை முன்வைத்தபடியே கோபத்தை கொட்டினார். இந்த வழக்கின் விசாரணைஒட்டுமொத்தமாக தவறு என்று நான் சொன்ன உண்மையை அவரது புண்பட்டிருந்த மனசு ஏற்க தயாராக இருக்கவில்ல. அந்த நிராகரிப்பு கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்த நான் அமைதியானேன்.
சந்திப்பை ஒப்புக்கொண்ட பிரியங்காவின் ’பெருந்தன்மை
நான் சொன்ன தகவல் அவரைக் கோபப்படுத்தியது, அந்த கோபம் என்னை அச்சுறுத்தியது, அவ்வளவுதான். நான் சொன்ன விளக்கம் எல்லாமும் ஆவணங்களில் இருந்ததைத்தான் விளக்கினேன் என்பதையும் அறியாதவர் அல்ல. அதனால் அவருக்கு வந்த கோபம் போலியாகவே நடந்த விசாரணைக் கட்டமைப்பின் மீதுதான் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். தவிர ஒரு கைதியிடம் அவர் நடந்துகொண்ட பாங்கு மிக உயர்ந்த குணத்தைக் கொண்டதாகவே அமைந்தது.
அந்த சந்திப்பு பற்றிய செய்தி முதலில் வெளியானவுடன் சிறைத் துறை (மாநில அரசு) ” அப்படிச் சந்திப்பு ஏதும் நடக்கவில்லை” என மறுத்தது. ஏன்..? பிரியங்கா “ஆமாம்…நடந்தது” என ஒப்புக் கொண்ட பின்னர்தான் உலகமே நம்பியது. அவரும் இல்லை என மறுத்து இருந்தால் அதனைத்தான் உலகம் நம்பி இருக்கும் . ஏன் எனில் அந்த சந்திப்பு நடந்ததற்கான பதிவு, ஆவணம் , அனுமதி என எதுவுமே சான்றாக இல்லை. அவரது பெருந்தன்மையினையும் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும். அவர் மறுத்து இருந்தால் என் மீது பழி சுமத்தி இருப்பர்களா? என் விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டை போட்டிருப்பார்களா?
இந்த இடத்தில் ஒரு கேள்வியினை நான் கேட்க விரும்புகிறேன். ஒருவேளை அதே காலத்தில் ராஜிவ் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க விரும்பி இருந்தால் அவர்கள் வேண்டாம்; முடியாது என மறுத்திருக்க முடியுமா? தம் மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக அந்த வாய்ப்பினை நிச்சயம் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவே விரும்பி இருப்பார்கள். நழுவவிட்டால் அது அவர்களது போராட்டத்திற்கு எதிராகப் போயிருக்காதா?
அதை விட்டுவிட்டு 17 ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வருவானேன் என்ற காரணமும் நோக்கமும் அரசியல் பின்னணி கொண்டதே. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இதனுள் அடங்கியிருக்கியிருப்பதாக நினைக்கின்றேன்.
சந்திப்பால் நல்லது நடந்ததா?
அதைத் தாண்டி இன்னொன்றையும் கூறலாம். ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் நிரபராதி என நினைத்திருக்கலாம். ரகசியச் சந்திப்பை இந்த பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனாலும் பார்க்க வந்திருக்கலாம்.
இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்த சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. ‘என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு என அறிக்கை கொடுத்திருந்தார். 2013ல் ஒரு பேட்டி, ‘அவரை மன்னித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போன பிறகுதான் அது தேவை இல்லை என்றாகிவிட்டது. அவரை சந்தித்த பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என மூன்று வரிகளில் கூறியிருந்தார். ஆக என்னை ஏதோ ஒரு வகையில் நிரபராதி என உணர்ந்துள்ளார். அதே நேரத்தில் அவரால் வெளிப்படையாக என் விடுதலையை பேசவும் முடியவில்லை. இந்தியா, சி.பி.ஐ என்ற கட்டமைப்பு குலைந்துபோய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்” இவ்வாறு அந்த புத்தகத்தில் நளினி தெரிவித்துள்ளார்.